Home One Line P1 சபா : அடுத்த முதல்வர் யார்? சாஹிட்-மொகிதின் மோதல்!

சபா : அடுத்த முதல்வர் யார்? சாஹிட்-மொகிதின் மோதல்!

610
0
SHARE
Ad

கோத்தாகினபாலு : சபா மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் பிரதமர் மொகிதின் யாசின், தேசிய முன்னணி-அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி இடையில் மோதல் உருவாகியிருக்கிறது.

முதலில் சபா தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி இடையில் மோதல்கள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து பல தொகுதிகளில் இரு அணிகளின் உறுப்பியக் கட்சிகளுக்கிடையில் மோதல்கள் உருவாகியிருக்கின்றன.

தற்போது அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இருதரப்புகளுக்கும் இடையில் பகிரங்கமான கருத்து மோதல்கள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை (செப்டம்பர் 12) நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் துவாரானில் மொகிதின் யாசின் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சபா சட்டமன்றப் பெரும்பான்மையைக் கைப்பற்றினால் தேசியக் கூட்டணி சார்பில் சபா பெர்சாத்து கட்சித் தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் (படம்), சபாவின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என மொகிதின் யாசின் அப்போது அறிவித்தார்.

எனினும் பெர்சாத்து கட்சிகளின் இணக்கத்துடன் இந்த முடிவு அமுல்படுத்தப்படும் என்றும் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

“அடுத்த முதலமைச்சரை தேசிய முன்னணி கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும்” – சாஹிட் ஹாமிடி

மொகிதின் யாசினுக்கு மறைமுகமாக பதிலடிக்கு கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் சாஹிட் ஹாமிடி சபா தேர்தல் முடிவடைந்ததும்தான் அடுத்த முதலமைச்சர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றார். தேசிய முன்னணி, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அடுத்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்போம் என்றும் சாஹிட் கூறியிருக்கிறார்.

சபா அம்னோவின் தலைவரான புங் மொக்தார் அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய முன்னணி-அம்னோ இணைந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினால் புங் மொக்தார் முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.

ஆனால், அவரை இப்போதே முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தி சபா வாக்காளர்களிடம் வாக்கு கேட்க தேசிய முன்னணி அச்சப்படுவதாகத் தெரிகிறது. நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் புங் மொக்தார் அடிக்கடி பல சர்ச்சைகளை தனது அறிக்கைகளால் உருவாக்குபவர்.

ஹாஜிஜி முதலமைச்சர் வேட்பாளர் என்பதை மொகிதின் யாசின் மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும் சில அம்னோ தலைவர்கள் சாடியிருக்கின்றனர்.

வாரிசானுக்கு சாதகமா?

இதற்கிடையில் தனது தலைமையின் கீழ் வாரிசான் பிளஸ் கூட்டணியில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தெளிவையும் உறுதியையும் கொண்டிருக்கின்றன என ஷாபி அப்டால் கூறியிருக்கிறார்.

வாரிசானுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஜசெக 7 தொகுதிகளிலும் அமானா கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இந்த இரண்டு கட்சிகளும் வாரிசான் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. பிகேஆர், வாரிசான் கூட்டணியில் 7 தொகுதியில் போட்டியிட்டாலும் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறது.

உப்கோ கட்சியும் வாரிசான் பிளஸ் கூட்டணியில் இணைந்து 12 தொகுதிகளில் தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

மொத்தமுள்ள 73 தொகுதிகளில் 54 தொகுதிகளில் வாரிசான் பிளஸ் கட்சிகள் வாரிசான் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இந்தக் கட்சிகள் அனைத்தும் ஷாபி அப்டாலை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு போட்டியிடுகின்றன.

அதைப் போல தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி இரண்டும் பொதுவான முதலமைச்சர் வேட்பாளரைக் கொண்டிருக்கவில்லை என ஷாபி அப்டால் கூறியிருக்கிறார்.

மொகிதின் யாசினுக்கும், சாஹிட் ஹாமிடிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்கள் ஷாபி அப்டாலுக்கே சாதகமாக அமையும் என கணிக்கப்படுகிறது.

இருவருக்கும் இடையிலான மோதல்கள் வாக்குப் பதிவுகளிலும் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பெர்சாத்து தலைவர் ஹாஜிஜியின் பின்னணி

தலைநகர் கோத்தா கினபாலுவில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகர் துவாரான். இந்நகரை மையமாகக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதி துவாரான்.

இங்குள்ள சுலாமான் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக ஹாஜிஜி முகமட் நூர் போட்டியிடுகிறார்.

துவாரான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் சுலாமான் ஒன்றாகும். கியூலு, தம்பாருலி ஆகியவை மற்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாகும்.

2004-ஆம் ஆண்டு முதல் சுலாமான் தொகுதியைத் தற்காத்து வருகிறார் ஹாஜிஜி முகமட் நூர். இந்த முறை தேசியக் கூட்டணி சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்.

பெர்சாத்து, ஸ்டார், எஸ்ஏபிபி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து தேசியக் கூட்டணியின் கீழ் போட்டியிடுகின்றன.

அம்னோ, பிபிஆர்எஸ், மசீச ஆகிய மூன்று கட்சிகளும் தேசிய முன்னணி சின்னத்தின்கீழ் போட்டியிடுகின்றன.

தேசியக் கூட்டணிக்கு ஆதரவு தரும் பிபிஎஸ் தனது சொந்த சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறது.

தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி, பிபிஎஸ் ஆகியவை வெற்றி பெற்றால் இணைந்து காபுங்கான் ராயாட் சபா என்ற ஆளும் அரசாங்கத்தை அமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அம்னோ 31 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. பெர்சாத்து 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றது.