Home One Line P1 சபா : “அடுத்த முதல்வர் பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி” – மொகிதின் யாசின்

சபா : “அடுத்த முதல்வர் பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி” – மொகிதின் யாசின்

578
0
SHARE
Ad

கோத்தாகினபாலு : எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபா பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி முகமட் நூர் (படம்) சபாவின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என மொகிதின் யாசின் அறிவித்தார்.

பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தேசியத் தலைவருமான மொகிதின் யாசின் தேசியக் கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ளார். தேசியக் கூட்டணி ஓரணியாகவும் தேசிய முன்னணி-அம்னோ இணைந்த கூட்டணி இன்னொரு அணியாகவும் இந்த முறை சபா தேர்தலில் போட்டியிடுகின்றன.

இதன் காரணமாக இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள உறுப்பியக் கட்சிகள் சில தொகுதிகளில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும் தங்களின் பெர்சாத்து கட்சியின் சகோதரத்துவக் கட்சிகள் ஒப்புக் கொண்டால் மட்டுமே ஹாஜிஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் மொகிதின் தனது கூற்றைத் தெளிவுபடுத்தினார்.

தற்போது சபாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் மொகிதின் யாசின் சபாவிலுள்ள துவாரான் நகருக்கு வருகை தந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தலைநகர் கோத்தா கினபாலுவில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகர் துவாரான்.

இங்குள்ள சுலாமான் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக ஹாஜிஜி முகமட் நூர் போட்டியிடுகிறார்.

துவாரான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் சுலாமான் ஒன்றாகும். கியூலு, தம்பாருலி ஆகியவை மற்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாகும்.

2004-ஆம் ஆண்டு முதல் சுலாமான் தொகுதியைத் தற்காத்து வருகிறார் ஹாஜிஜி முகமட் நூர். இந்த முறை தேசியக் கூட்டணி சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார். ஹாஜிஜி முன்பு அம்னோவில் இணைந்து இயங்கியவராவார். 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரோடு இணைந்து அம்னோவில் இருந்து வெளியேறினார். பின்னர் பெர்சாத்துவில் இணைந்தார்.

சபா தேர்தலில் பெர்சாத்து, ஸ்டார், எஸ்ஏபிபி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து தேசியக் கூட்டணியின் கீழ் போட்டியிடுகின்றன.

அம்னோ, பிபிஆர்எஸ், மசீச ஆகிய மூன்று கட்சிகளும் தேசிய முன்னணி சின்னத்தின்கீழ் போட்டியிடுகின்றன.

தேசியக் கூட்டணிக்கு ஆதரவு தரும் பிபிஎஸ் தனது சொந்த சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறது.

தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி, பிபிஎஸ் ஆகியவை வெற்றி பெற்றால் இணைந்து காபுங்கான் ராயாட் சபா என்ற ஆளும் அரசாங்கத்தை அமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அம்னோ 31 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. பெர்சாத்து 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றது.