புதுடில்லி : அண்மையில் கொவிட்-19 தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அவர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்ற பின்னர் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 12) இரவு 11.00 மணியளவில் (இந்திய நேரம்) அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இந்த முறை எந்தப் பிரச்சனை என்பது குறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
கொவிட்-19 பாதிப்புகளிலிருந்து விடுபட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இல்லத்தில் இருப்பதை விட மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதாலேயே அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கொவிட்-19 பாதிக்கப்பட்ட அமித் ஷா
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொவிட்-19 தொற்றுக்காக கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கொவிட்-19 தொற்று குணமான பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவர் மீண்டும் ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இதயநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.