கோலாலம்பூர்: நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 12) நண்பகல் வரைக்குமான 24 மணி நேர கால அவகாசத்தில் மலேசியாவில் 58 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 11) கொவிட்-19 தொற்றுகளின் பாதிப்பு மலேசியாவில் 182 ஆக உயர்ந்து நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான ஒருநாள் தொற்று சம்பவங்களின் பதிவு இதுவாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 8-ஆம் தேதி 100 புதிய தொற்றுகள் ஒரே நாளில் பதிவானது.
அதைத் தொடர்ந்து நேற்றைய எண்ணிக்கை 58-ஆகக் கணிசமாகக் குறைந்திருப்பது ஓர் ஆறுதலான அம்சமாகும். இதில் உள்நாட்டில் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 53 ஆகும். உள்நாட்டுத் தொற்றுகளில் 48 சபாவில் அடையாளம் காணப்பட்டவை.
இந்த 48 தொற்று சம்பவங்களில் 44 சம்பவங்கள் பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் தொடர்புடையதாகும். மேலும் 3 சம்பவங்கள் “லாவுட்” என்ற புதிய தொற்றுத் திரள் தொடர்புடையதாகும். இந்த லாவுட் தொற்றுத் திரள் முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளால் சபா, குனாக் வட்டாரத்தில் பீடிக்கப்பட்டதாகும்.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தனது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். எனினும் அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி தனது மனைவியைப் பார்ப்பதற்காக மீண்டும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கும் அவரது மனைவிக்கும் அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களுக்கும் இந்தப் புதிய தொற்றுத் திரள் பரவத் தொடங்கியது.
இன்னொரு தொற்று கோத்தா கினபாலுவில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன்னர் பரிசோதித்ததில் அடையாளம் காணப்பட்டதாகும்.
கெடாவில் பரவிய சுங்கை தொற்றுத் திரளின் மூலம் 5 புதிய கொவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.
பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் மூலம் இதுவரையில் 381 தொற்றுகள் பரவியிருப்பது உறுதியாகியிருக்கிறது.
தற்போது கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சின் சார்பில் அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 12) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
அதே வேளையில் சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை என்பதும் ஆறுதலான ஓர் அம்சமாகும்.
எனவே, இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் பரவுவதற்குக் காரணம் தடுப்புக் காவல் மையங்களில் மிக நெருக்கமான அளவில் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதாகும் என சுகாதார அமைச்சின் அறிக்கை ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.
எந்த இடமாக இருந்தாலும் மக்களிடையே கூடல் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும் எனவும் நூர் ஹிஷாம் வலியுறுத்தியிருந்தார். அவரது எச்சரிக்கை அடுத்த சில நாட்களிலேயே இத்தகைய பெரிய எண்ணிக்கையிலான தொற்றுகளினால் உண்மையாகியுள்ளது.
பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் முறையான ஆவணங்கள் இல்லாத இரண்டு வெளிநாட்டுக் குடியேறிகள் மூலம் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் லகாட் டாத்து காவல் நிலைய தடுப்பு முகாமிலிருந்து தொடங்கியது.
நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,868 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,189 ஆகும்.
சனிக்கிழமை வரை கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டில் மொத்தம் 551 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 5 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூரில் தொற்று கண்ட 58 பேர்களில் 5 பேர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்கள். உள்ளூரில் தொற்று கண்ட 53 பேர்களில் 29 பேர் மலேசியர்கள். எஞ்சிய 24 பேர் வெளிநாட்டவர். இந்த 24 வெளிநாட்டவர் அனைவரும் சபாவைச் சேர்ந்தவர்கள்.
29 மலேசியர்களில் 24 பேர் சபாவைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய ஐவர் கெடாவைச் சேர்ந்தவர்கள்.