Home One Line P1 சபாவில் பிகேஆர் சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறது

சபாவில் பிகேஆர் சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறது

579
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சி சொந்த சின்னத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

ஜசெக, அமானா கட்சிகள் தாங்கள் வாரிசான் கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதாக அறிவித்திருந்ததை அடுத்து இந்த இந்த அறிவிப்பு வெளிவந்தது.

“பிகேஆர் கட்சியின் சின்னத்தையே பயன்படுத்தும்” என்று சபா தகவல் தொடர்புத் தலைவர் சிம்சுடின் சிடெக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், ஜசெக, வாரிசான் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவதாக அறிவித்தது குறித்து கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமானா கட்சி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வாரிசான் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.

சபா தேர்தலில் வாரிசான் கட்சி நம்பிக்கைக் கூட்டணி மற்றும் உப்கோ கூட்டணியை வழிநடத்துகிறது.

தமது கூட்டணிக் கட்சிகள் வாரிசான் சின்னத்தைப் பயன்படுத்த கட்சி ஒருபோதும் கட்டாயப்படுத்தாது என்று ஷாபி அப்டால் முன்னதாக கூறியிருந்தார். பயன்படுத்தப்படும் சின்னம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், இட ஒதுக்கீட்டில் பிகேஆர் மன நிறைவுக் கொண்டதாகத் தெரிகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட பிகேஆர், இம்முறை தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

“சபாவில் பிகேஆர் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 170,000-ஐ எட்டியுள்ளது. சிலாங்கூரை அடுத்து சபாவில்தான் அதிகமானோர் பிகேஆரில் உறுப்பினராக உள்ளனர்

“அதன் காரணமாக, கட்சி இம்முறை 14 தொகுதிகளில் போட்டியிடும். இது நியாயமான முடிவாக உள்ளது என்று கருதுகிறோம். முன்னதாக 60 தொகுதிகள் இருந்தன. இப்போது 73 தொகுதிகளாக உயர்த்தப்பட்டுள்ளன” என்று சிம்சுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) சபா முதல்வரும் வாரிசான் கட்சியின் தலைவருமான ஷாபி அப்டாலுடன் அன்வார் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

பிகேஆர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

“பிகேஆர் கட்சி சபாவில் வலுவுடன் திகழ்கிறது. சிலாங்கூர் மாநிலத்திற்கு அடுத்து அதிகமான உறுப்பினர்களை சபா மாநிலத்தில் பிகேஆர் கொண்டிருக்கிறது” என்று சந்திப்பிற்குப் பிறகு சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

தங்களின் சந்திப்பின்போது எதிர்வரும் சபா தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் ஷாபி அப்டால் வெளிப்படுத்தினார் என்று சைபுடின் கூறியிருந்தார்.

சபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறும்.