Home One Line P1 ஜோகூரில் சபாநாயகர் நீக்கம் இல்லை

ஜோகூரில் சபாநாயகர் நீக்கம் இல்லை

518
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூரில் தேசிய கூட்டணி அரசாங்கம், மாநில சட்டமன்ற சபாநாயகர் சுஹாய்சான் கைஹாட்டை நீக்குவதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஹுசான் கைஹாட் நம்பிக்கைக் கூட்டணி அரசால் மாநில சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

மாநில சட்டமன்றத்தில் தேசிய கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும், தாங்கள் கைப்பற்றிய மாநிலங்களில் தேசிய கூட்டணி தங்களின் சொந்த சபாநாயகர்களை நியமித்துள்ளது. ஜோகூரில் மட்டும் இன்னும் அவ்வாறு செய்யப்படவில்லை.

#TamilSchoolmychoice

ஜோகூர் சட்டமன்றம் இன்று இரண்டாவது முறையாகக் கூடியுள்ளது. சபாநாயகரை நீக்க 14 நாட்கள் அறிவிப்பு கடிதம் வெளியிட வேண்டும் என்றும், இன்றைய அமர்வில் அது இடம் பெறவில்லை என்றும் அறியப்படுகிறது.

இது வரையிலும், தேசிய கூட்டணி சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை இன்னும் கொண்டு வராத சூழல் இருப்பது தெரிய வருகிறது. ஒஸ்மான் சாபியான் தேசிய கூட்டணிக்கு நேர்மையுடன் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களில் ஒஸ்மான் பெஜுவாங் நிகழ்ச்சியில் காணப்பட்டது இந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் தற்போது பெர்சாத்து ஒழுகாற்றுக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஒரு வேளை ஒஸ்மான் சாபியான் அவரது ஆதரவை துன் மகாதீர் பக்கம் திருப்பினால், ஜோகூர் சட்டமன்றம் பெரும்பான்மை இல்லாத சட்டமன்றமாக உருமாறும்.

ஜோகூரில் தேசிய கூட்டணி 29 இடங்களைக் கொண்டுள்ளது. நம்பிக்கைக் கூட்டணி 27 இடங்களைக் கொண்டுள்ளது.

அண்மையில், மாநிலத்தில் ஆட்சி போராட்டத்திற்கு மத்தியில், இதே நிலைமை தொடர்ந்தால் ஜோகூர் சுல்தான் சட்டமன்றத்தைக் கலைக்க இருப்பதாக எச்சரித்திருந்தார்.