Home One Line P1 ‘அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைப்பதே நோக்கம்’- சைட் சாதிக்

‘அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைப்பதே நோக்கம்’- சைட் சாதிக்

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் இளைஞர்களை மையமாகக் கொண்ட கட்சியை ஏற்படுத்துவது குறித்து துன் மகாதீர் விமர்சித்ததை அடுத்து,  அதற்கு சைட் சாதிக் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, சைட் சாதிக்கின் இளைஞர்கள் கட்சி மலாய்க்காரர்களை மேலும் பிளவு படுத்தும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த சைட் சாதிக், தாம் துன் மகாதீரின் கருத்தினை மதிப்பதாகவும், தமது தற்போதைய பணியானது, அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நான் இங்கு மலாய்க்காரர்களின் சேவகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. அனைத்து மலேசியர்களின் சேவகனாக இருக்க விரும்புகிறேன். நான் மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க மட்டும் இல்லை, அனைத்தும் மலேசியர்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்”

“நான் துன் மகாதீரை மதிக்கிறேன். ஓர் இளைஞனாக, நம்பிக்கையுடன், மலேசியாவில் பன்முகத்தன்மை நம் பலம் என்று நான் மிகவும் நம்புகிறேன்.

“அவர் மலாய்க்காரர்களின் வாக்குகளை சிதைப்பதைப் பற்றி பேசுகிறார், ஆனால், நான் அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சி பற்றிய சைட் சாத்திக்கின் கருத்தை “வயதானவர்களை” ஓரங்கட்டிவிடும் என்று மகாதீர் விமர்சித்திருந்தார்.

எவ்வாறாயினும், புதிய கட்சி இளைஞர்களால் வழிநடத்தப்படும் என்றும், இளைஞர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானது அல்ல என்றும் சைட் சாதிக் கூறியிருந்தார்.

அண்மையில், சைட் சாதிக்கின் புதிய கட்சி வெற்றி பெற முடியாது என்று மகாதீர் கூறியிருந்தார்.

“சைட் சாதிக் அறிவித்துள்ள கட்டமைப்பு கொண்ட இளைஞர் கட்சியில் எனக்கு நம்பிக்கையில்லை. அவர் ஏன் அந்தக் கட்சியைத் தொடக்குகிறார் என்பதும் எனக்குத் தெரியவில்லை” என மகாதீர் தெரிவித்திருந்தார்.

“இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கை கொண்ட வாக்காளர்கள்தான். ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞர்களும் வயதானவர்களும் கண்டிப்பாக இருப்பார்கள். சைட் சாதிக் கட்சி இளைஞர்களை கவர்ந்தாலும் வெற்றி பெறமுடியாது. இருப்பினும் அவருக்கும் எனக்கும் இடையில் இன்னும் நல்லுறவு இருக்கிறது. அவரது கட்சி ஊழலை எதிர்த்துப் போராடும் என்றால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற பெஜூவாங் பின்னர் முன்வரும்” என்றும் மகாதீர் மேலும் தெரிவித்திருந்தார்.