Home One Line P1 “சைட் சாதிக் இளைஞர் கட்சி வெற்றி பெறாது!” – மகாதீர் கணிப்பு

“சைட் சாதிக் இளைஞர் கட்சி வெற்றி பெறாது!” – மகாதீர் கணிப்பு

622
0
SHARE
Ad

கோலாலம்பூர் : “சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் தொடங்கவிருக்கும் இளைஞர் கட்சி வெற்றி பெற முடியாது. அடுத்த ஆட்சியை அமைப்பது யார் என்பதை பெஜூவாங் கட்சியே நிர்ணயிக்கும்” என துன் மகாதீர் கூறியிருக்கிறார்.

சைட் சாதிக் முன்னாள் பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவராவார். மகாதீர் அமைச்சரவையில் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

பெஜூவாங் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்து அதற்கான பதிவுக்காக மகாதீர் காத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனினும், மகாதீரின் கட்சியில் சைட் சாதிக் இணையவில்லை. மாறாக புதிய இளைஞர் கட்சியைத் தோற்றுவிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் நடப்பு மலேசிய அரசியலை மாற்றியமைக்கப் போவதாகவும் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

“சைட் சாதிக் அறிவித்துள்ள கட்டமைப்பு கொண்ட இளைஞர் கட்சியில் எனக்கு நம்பிக்கையில்லை. அவர் ஏன் அந்தக் கட்சியைத் தொடக்குகிறார் என்பதும் எனக்குத் தெரியவில்லை” என மகாதீர் இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

எனினும் தனது பெஜூவாங் கட்சி குறைந்தது 30 நாடாளுமன்றத் தொகுதிகளை அடுத்த பொதுத் தேர்தலில் வெல்லும் எனவும் மகாதீர் கூறினார். அதன்மூலம் நாங்களே அடுத்த ஆட்சியாளரை நிர்ணயிப்போம் என்றும் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கை கொண்ட வாக்காளர்கள்தான். ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞர்களும் வயதானவர்களும் கண்டிப்பாக இருப்பார்கள். சைட் சாதிக் கட்சி இளைஞர்களை கவர்ந்தாலும் வெற்றி பெறமுடியாது. இருப்பினும் அவருக்கும் எனக்கும் இடையில் இன்னும் நல்லுறவு இருக்கிறது. அவரது கட்சி ஊழலை எதிர்த்துப் போராடும் என்றால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற பெஜூவாங் பின்னர் முன்வரும்” என்றும் மகாதீர் மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் அரசாங்கத்தை அமைக்க முடியாது. ஆனால் எங்களால் 30 தொகுதிகளை வெல்ல முடியும். அது போதும். அடுத்த அரசாங்கம் யார் என்பதை நாங்களே முடிவு செய்வோம்” என்றும் மகாதீர் கணித்தார்.

தற்போதைக்கு தங்கள் வசமும், தங்கள் நட்பு கட்சிகள் வசமும் 18 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன என மகாதீர் சுட்டிக் காட்டினார். ஷாபி அப்டால் தலைமையிலான சபா வாரிசான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் தனது பட்டியலில் இணைத்துக் கூறுகிறார் எனக் கருதப்படுகிறது.

சைட் சாதிக்கின் புதிய இளைஞர் கட்சி

மலேசியாகினி ஊடகத்திற்கு அண்மையில் சைட் சாதிக் (படம்) நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். மூடா மலேசியா (Muda Malaysia) என தற்போதைக்கு தனது புதிய இளைஞர் கட்சி அழைக்கப்படும் என அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

பல இனக் கட்சியாகவும் இளைஞர்களை தலைவர்களாகக் கொண்டும் இந்தக் கட்சி இயங்கும். பண அரசியலை முறியடிப்பது, தற்போது இருக்கும் அரசியல் தனிநபர் ஆதிக்கங்களை ஒழிப்பது, இளைஞர் நலன்களை முன்னிறுத்துவது, அடுத்த தலைமுறை இளம் தலைவர்களை உருவாக்குவது போன்ற அம்சங்களை தனது கட்சி முன்னெடுக்கும் என்றும் சைட் சாதிக் கூறியிருந்தார்.

பெஜூவாங் 30 தொகுதிகளை வெல்ல முடியுமா?

துன் மகாதீர் தனித்து நின்றாலும், கூட்டணியாகப் போட்டியிட்டாலும், 30 தொகுதிகளை வெல்வது கடினம் என அரசியல் பார்வையாளர்கள் கணித்திருக்கின்றனர்.

தேசிய முன்னணி- முவாபாக்காட் நேஷனல் – தேசியக் கூட்டணி என்ற அணி ஒருபுறமும், நம்பிக்கைக் கூட்டணி இன்னொரு புறமும் என இரண்டு வலிமை மிக்க சக்திகளுக்கிடையில் துன் மகாதீரின் கட்சி 30 தொகுதிகளை 15-வது பொதுத் தேர்தலில் வெல்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளும் இதனையே தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்று முடிந்த பேராக் மாநிலத்தின் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே தேசிய முன்னணி மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துப் போட்டியிட்ட அம்னோ தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் முகமட் சைடி அசிஸ் 13,060 வாக்குகள் பெற்றார். பெஜூவாங் கட்சியின் சார்பாக சுயேச்சையாகப் போட்டியிட்ட அமிர் குசாய்ரி 2,115 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

மற்றொரு சுயேச்சை வேட்பாளரான சந்திரசேகரன் சுப்பிரமணியம் 276 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

43 வயதான அம்னோவின் சைடி அசிஸ் 10,945 வாக்குகள் பெரும்பான்மையில் சிலிம் சட்டமன்றத்தைக் கைப்பற்றினார்.

15-வது பொதுத் தேர்தலிலும் இதே போன்ற வாக்களிப்புதான், ஆதரவுதான் மகாதீர் கட்சிக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.