Home One Line P1 சிலிம் சட்டமன்றம்: அமிர் குஷாயிரி பெஜூவாங் கட்சி வேட்பாளர்

சிலிம் சட்டமன்றம்: அமிர் குஷாயிரி பெஜூவாங் கட்சி வேட்பாளர்

790
0
SHARE
Ad

சிலிம் ரிவர் : எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் துன் மகாதீரின் கட்சியான பெஜூவாங் தானா ஆயர் கட்சியின் வேட்பாளராக அமிர் குஷாயிரி முகமட் தனுசி (படம்) போட்டியிடுவார்.

இன்று புதன்கிழமை இரவு சிலிம்ரிவரில் நடைபெற்ற கூட்டத்தில் துன் மகாதீர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அமிர் குஷாயிரி ஷாரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத் துறை வழக்கறிஞராவார்.

#TamilSchoolmychoice

இவர் தேசிய முன்னணி வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்ட தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் முகமட் சைய்டி அசிஸை எதிர்த்துப் போட்டியிடுவார்.

இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் துன் மகாதீரோடு, ஜசெகவின் அந்தோணி லோக், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் பெர்சாத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானும் கலந்து கொண்டார். மகாதீர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

துன் மகாதீர் புதிய கட்சியை கடந்த வாரம் அறிவித்தபோது அந்தக் கூட்டத்தில் சைட் சாதிக் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். இது பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டது.

அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளரான முகமட் சைய்டி, 43, தேர்வு குறித்த அறிவிப்பை இன்று இங்குள்ள சிலிம் பெல்டா குடியிருப்பில் கூட்டணியின் சிலிம் இடைத்தேர்தல் இயக்குநராக இருக்கும் பேராக் தேசிய முன்னணி தலைவர் டத்தோ சாராணி முகமட் வெளியிட்டார்.

ஜூலை 15-ஆம் தேதி டத்தோ முகமட் குசாய்ரி அப்துல் தாலிப் மரணமுற்றதைத் தொடர்ந்து சிலிம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனுத் தாக்கல் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

14- வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்த மறைந்த முகமட் குசாய்ரி அத்தொகுதியில் வென்றார்.

சிலிம் சட்டமன்றத் தொகுதி 23,094 வாக்காளர்களைக் கொண்டது. இதில் மலாய் வாக்காளர்கள் 75 விழுக்காட்டினர். இந்தியர்கள் 13 விழுக்காட்டினர். சீனர்கள் 10 விழுக்காட்டினர். மற்றவர்கள் 2 விழுக்காட்டினர்.

தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதி சிலிம் சட்டமன்றத் தொகுதியாகும்.

1959 முதல் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி மசீச- தேசிய முன்னணி வசம் இருந்தது. கடந்த 2018 பொதுத் தேர்தலில் ஜசெக இந்தத் தொகுதியை வெற்றி கொண்டது.