Home One Line P1 ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு

ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு

681
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டில் ஊழலைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் நியமனத்தில் இனி புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தால் மட்டுமே தலைமை ஆணையர் நியமனம் செல்லுபடியாகும்.

தலைமை ஆணையரை இனி பிரதமரோ, அரசாங்கமோ நேரடியாக நியமிக்கும் நடைமுறை பின்பற்றப்படாது.

அதே வேளையில் தலைமை ஆணையரை நீக்குவதென்றாலும் ஒரு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து அவர்களின் முடிவுப்படிதான் நீக்க முடியும் என்ற நடைமுறையும் கொண்டுவரப்படுகிறது.

#TamilSchoolmychoice

தற்போதுள்ள நடைமுறைப்படி பிரதமரின் ஆலோசனையின்பேரில் மாமன்னர் தலைமை ஆணையரை நீக்க முடியும். இனி இந்த நடைமுறை பின்பற்றப்படாது.

இந்த விவரங்களை வெளியிட்ட நடப்பு தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஊழலுக்கு எதிரான சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு மொகிதின் யாசின் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கென பிரத்தியேக ஊழியர் தேர்வு வாரியம் அமைக்கப்படுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தற்போது அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பொதுச் சேவை இலாகா (Public Service Commission) மூலமே ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழியர்களை நியமிக்கும், அகற்றும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த புதிய நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையும், பாரபட்சமற்ற அணுகுமுறையும் நிலைநிறுத்தப்படும்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் நிருவாகமே ஊழியர்களை நியமிக்கும், அகற்றும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதன் மூலம் மேலும் சுதந்திரமாக ஆணையம் செயல்பட முடியும் என்றும் அசாம் பாக்கி மேலும் தெரிவித்தார்.

வானொலிக்கான நேர்காணல் ஒன்றின்போது அசாம் பாக்கி இந்த விவரங்களை வெளியிட்டார்.