Home One Line P1 லிம் குவான் எங் : சபாவில் நுழைய முதலில் மறுப்பு – பின்னர் அனுமதி

லிம் குவான் எங் : சபாவில் நுழைய முதலில் மறுப்பு – பின்னர் அனுமதி

707
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) இரவு கோத்தா கினபாலுவுக்கு விமானம் மூலம் வந்தடைந்த ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சபாவில் நுழைவதற்கு தடை இருப்பதாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டார்.

இருப்பினும் சற்றுநேர விசாரணைக்குப் பின்னர் லிம் குவான் எங் சபாவில் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து குவான் எங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். “கோத்தா கினபாலு விமான நிலையத்தில் எனக்கு இரவு 11.54 மணிக்கு குடிநுழைவு அனுமதி வழங்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து வெளியேறி காரில் நான் ஏறப் போனபோது குடிநுழைவு அதிகாரி ஒருவர் வந்து என்னை மீண்டும் குடிநுழைவு மையத்துக்கு வருமாறு அழைத்தார். அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நான் மீண்டும் குடிநுழைவு இலாகாவுக்கு சென்றேன். அங்கு 20 நிமிடங்கள் காத்திருந்த பின்னர் என்ன பிரச்சனை என்று கேட்டேன். ஊழல் தடுப்பு ஆணையம் நான் சபாவுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது என்று என்னிடம் கூறப்பட்டது” என லிம் குவான் எங்க் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஆச்சரியத்துடன் நான் மாநிலத்தில் நுழைவதற்கான தடை விதிக்கும் அதிகாரம் சபா மாநிலத்துக்கு அல்லவா இருக்கிறது? என நான் கேள்வி எழுப்பினேன்” என்றும் குவான் எங் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.

“நஜிப் ரசாக் மீது 12 வருடம் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் பிரச்சனையின்றி சபாவில் நுழைய முடிகிறது. தற்போது நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கி இருக்கும் சாஹிட் ஹாமிடியும் சபாவில் தாராளமாக நுழைய முடிகிறது. எனக்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது? ஏன் இந்த இரட்டை அணுகுமுறை?” என கேள்வி எழுப்பியதாகவும் குவான் எங் குறிப்பிட்டார்.

“மாநிலத்திற்குள் நுழைவது என்பது மாநில அரசாங்கத்தின் உரிமை. மத்திய அரசாங்கத்தின் உரிமையல்ல. எனவே, இது மாநில அரசாங்கத்தின் உரிமையில் மத்திய அரசாங்கம் தலையிடுவதற்கான முயற்சிகளில் ஒன்றா?” என்றும் தனது முகநூல் பதிவில் குவான் எங் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சுமார் ஒரு மணிநேர தாமதத்திற்குப் பின்னர் தான் சபாவில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் குவான் எங் தெரிவித்தார்.

பின்னர் சபா முதலமைச்சர் ஷாபி அப்டாலைச் சந்திக்கும்போது நான் சபாவில் நுழைவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா எனக் கேட்பேன் என்றும் குவான் எங் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சில மணி நேரங்கள் கழித்து கருத்துரைத்த ஷாபி அப்டால் சபாவில் நுழைவதற்கு யார் மீதும் தான் தடை விதிக்கவில்லை என்றார். தான் முதலமைச்சரானதும் முதல் பணியாக ஏற்கனவே சபாவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தவர்கள் மீண்டும் சபாவில் நுழைய அனுமதி வழங்கியதாகவும் அவர்கள் மீதான தடையை நீக்கியதாகவும் ஷாபி அப்டால் தெரிவித்தார்.