
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ச.வேள்பாரி இன்று நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக (செனட்டராக) நியமிக்கப்பட்டார்.
வேள்பாரி முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனாவார்.
வேள்பாரி செனட்டராகப் பதவியேற்றவுடன் அவரது தந்தையார் துன் சாமிவேலு, குடும்ப நண்பர் டான்ஸ்ரீ பூவன், மஇகா உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி.மோகன் தம்பதியர் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியின்போது வேள்பாரியின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயரும் உடனிருந்தார்.
மக்களவையின் கூட்டத் தொடர் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நாடாளுமன்ற மேலவையின் கூட்டத் தொடர் தொடங்கியது.
இன்று நாடாளுமன்ற மேலவையின் புதிய தலைவராக டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மேலவைத் தலைவராகப் பணியாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்தில் முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து புதிய மேலவைத் தலைவராக முன்னாள் அம்னோ அமைச்சரும், பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான ராய்ஸ் யாத்திம் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அவரும் இன்று மேலவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மஇகாவின் தலைமைச் செயலாளராகச் செயல்பட்டு வந்த வேள்பாரி கடந்த ஆண்டு அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். தனது வணிக நலன்களுக்காகவும், உடல் நலம் குன்றியிருக்கும் தந்தையைக் கவனித்துக் கொள்ளும் பொருட்டும் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் அறிவித்தார்.
கடந்த ஜூன் மாதத்தோடு நிறைவுக்கு வந்த விக்னேஸ்வரனின் செனட்டர் பதவி வேள்பாரிக்கு வழங்கப்படுவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன. 2014 ஜூன் தொடங்கி 2020 ஜூன் வரை இரண்டு தவணைகளுக்கு விக்னேஸ்வரன் செனட்டர் பதவியை வகித்தார்.
செனட்டர் பதவியை வகித்த காலகட்டத்தில் நாடாளுமன்ற மேலவைத் தலைவராகவும் விக்னேஸ்வரன் பதவி வகித்தார்.
1990-ஆம் ஆண்டுகளில் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையே ஓர் உடன்பாடு காணப்பட்டது. நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி கூட்டணி கட்சிகளுக்கிடையே ஒரு தவணை வீதம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற உடன்பாடுதான் அது. அந்த அடிப்படையில் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையில் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி சுழல் முறையில் வகிக்கப்பட்டு வந்திருக்கிறது.
முதல் சுற்றில் மஇகா சார்பில் டான்ஸ்ரீ ஜி.வடிவேலு ஏப்ரல் 1992 முதல் ஜூன் 1995 வரை நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றினார்.
இரண்டாம் வாய்ப்பு சுழல் முறையில் மஇகாவுக்கு வந்தபோது விக்னேஸ்வரன் அந்தப் பதவியை வகித்தார்.