Home One Line P1 ராய்ஸ் யாத்திம் நாடாளுமன்ற மேலவைத் தலைவரானார்

ராய்ஸ் யாத்திம் நாடாளுமன்ற மேலவைத் தலைவரானார்

707
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடாளுமன்ற மேலவைத் தலைவராக பெர்சாத்து கட்சியின் செனட்டர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனினும் ராய்ஸ் யாத்திம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் செனட்டர் யுஸ்மாடி யூசோப்புக்கு 19 வாக்குகள் கிடைத்தன. ராய்ஸ் யாத்திமுக்கு 45 வாக்குகள் கிடைத்தன. மொத்தமுள்ள 65 செனட்டர்களில் ஒருவர் இன்று அவைக்கு வரவில்லை.

மொகிதின் யாசினின் தேர்வான ராய்ஸ் யாத்திம் நியமனத்தை அம்னோ விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் அம்னோ தனது வேட்பாளர் யார் என்பதைக் குறிப்பிடவில்லை. போட்டியிலும் இறங்கவில்லை.

#TamilSchoolmychoice

இன்றைய அவைக் கூட்டத்தில் பெஜூவாங் கட்சியின் மார்சுகி யாஹ்யா வாரிசான் கட்சியின் செனட்டரான தியோடர் டக்ளஸ் லிண்ட் என்பவரை முன்மொழிந்தார். எனினும் டக்ளஸ் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

ராய்ஸ் யாத்திம் பெயரை அவைத் தலைவராக பிரதமர் மொகிதின் யாசின் முன் மொழிந்தார். எனினும் மொகிதின் செனட்டர் அல்ல என்பதால் அவர் அவைத் தலைவராக ஒருவரை முன்மொழிய முடியாது என ஜசெக கட்சியின் செனட்டர் இங்கா ஹோக் சே எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜசெகவின் எதிர்ப்பை மேலவைத் துணைத் தலைவர் அப்துல் ஹாலிம் அப்துல் சமாட் நிராகரித்தார். பிரதமருக்கு அவைத்தலைவரை முன்மொழிய அதிகாரம் இருக்கிறது என அவர் கூறினார்.

சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் அப்துல் ஹாலிமின் முடிவைத் தற்காத்தார்.

விக்னேஸ்வரனுக்கு பதிலாக ராய்ஸ் யாத்திம்

கடந்த ஜூன் 22ஆம் தேதியுடன் தனது நாடாளுமன்ற மேலவை தலைவர் பதவியை நிறைவு செய்தார் மஇகா தேசியத் தலைவரான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன். அவருக்கு பதிலாக புதிய நாடாளுமன்ற மேலவை தலைவராக டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்துறையில் சிறந்த கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்கும் ராய்ஸ் யாத்திம் சட்டக் கல்வியில் முனைவர் (பி.எச்டி) பட்டம் பெற்றவர்.

ஆரம்ப காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அம்னோவின் வழி அரசியலில் குதித்தார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் மந்திரிபெசாராகவும் பணியாற்றினார்.

1978 முதல் 1982 வரை அவர் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக பதவி வகித்தார்.

ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினராக நீண்ட காலம் சேவையாற்றியிருக்கும் அவர் பின்னர் மத்திய அமைச்சராகவும் செயலாற்றினார்.

1974 முதல் 1986 வரை மூன்று தவணைகளுக்கு ஜெலுபு (நெகிரி செம்பிலான் ) நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இயங்கினார்.

துங்கு ரசாலியுடன் இணைந்து மகாதீரை எதிர்த்தவர்

1990 ஆம் ஆண்டுகளில் துன் மகாதீர், துங்கு ரசாலி ஹம்சா இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தில் மகாதீரை எதிர்த்தார். துங்கு ரசாலி பக்கம் சாய்ந்தார்.

துங்கு ரசாலி தோற்றுவித்த செமாங்காட் 46 கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் துணைத் தலைவராகவும் உயர்ந்தார்.

எனினும் தனது சொந்தத் தொகுதியான ஜெலுபுவில் செமாங்காட் 46 வேட்பாளராக 1990, 1995 பொதுத் தேர்தல்களில் தோல்வியடைந்தார்.

1995 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து, செமாங்காட் கட்சியைக் கலைத்துவிட்டு, மீண்டும் துங்கு ரசாலி அம்னோவில் இணைந்தார். அவருடன் ராய்ஸ் யாத்திம் மீண்டும் மகாதீருக்கு ஆதரவாக அம்னோவில் இணைந்தார்.

அதன்பின்னர் 1999, 2004, 2008 மூன்று பொதுத் தேர்தல்களிலும் மீண்டும் அம்னோ வேட்பாளராக ஜெலுபுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மகாதீரின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றினார். 2003-ஆம் ஆண்டில் மகாதீர் பதவி விலகிய பின்னர் தொடர்ந்து துன் படாவி அமைச்சரவையிலும், நஜிப் துன் ரசாக் அமைச்சரவையிலும் பணியாற்றினார் ராய்ஸ்.

2013 பொதுத் தேர்தலில் அவருக்கு நஜிப் மீண்டும் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. எனினும் அம்னோவுக்கு தொடர்ந்து விசுவாசமாக இயங்கினார்.

சிறந்த மேடைப் பேச்சாளரான அவர் எந்தவொரு விவகாரத்திலும் ஒரு வழக்கறிஞருக்கே உரிய அறிவாற்றலுடன் ஆணித்தரமாகவும், அடுக்கடுக்காகவும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கக் கூடியவர்.

அம்னோவில் இருந்து விலகி மகாதீருடன் இணைந்தார்

2018-ஆம் ஆண்டில் துன் மகாதீர் நஜிப்புக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தொடங்கிய போது அந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் ராய்ஸ் யாத்திம்.

பல இடங்களில் குறிப்பாக நெகிரி மாநிலத்தில் துன் மகாதீர் தலைமையிலான அணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

மகாதீர் தலைமையிலான பெர்சாத்து கட்சியிலும் இணைந்தார் ராய்ஸ் யாத்திம். 2018 பொதுத் தேர்தலில் மீண்டும் ஜெலுபு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அந்த வாய்ப்பை மகாதீர் அவருக்கு வழங்கவில்லை.

மொகிதின் பக்கம் சாய்ந்தார்

இந்த ஆண்டில் மொகிதின் யாசின், மகாதீர் இடையிலான போராட்டத்தில் அவர் மொகிதின் யாசின் பக்கம் சேர்ந்தார். ஆரம்ப காலம் முதல் மகாதீரின் ஆதரவாளராகப் பார்க்கப்பட்டவர் திடீரென மொகிதின் பக்கம் ஆரவாரமின்றி இயங்கினார்.

நெகிரி செம்பிலான் மாநில பெர்சாத்து கட்சித் தலைவராகவும் ராய்ஸ் பதவி வகிக்கிறார்.

கடந்த ஜூன் 16-ஆம் தேதி ராய்ஸ் யாத்திம் செனட்டராக நியமிக்கப்பட்டார்.

அடிக்கடி தனது அரசியல் முகத்தை மாற்றிக் கொண்டவர் என்ற வகையில் அவர் மீது விமர்சனங்கள் நிறைய எழுந்திருக்கின்றன.

எனினும், நிறைந்த நாடாளுமன்ற அனுபவம், சட்டத் துறைப் பின்னணி, அரசியல் அனுபவம், அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் போன்ற அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக ராய்ஸ் யாத்திம் கருதப்படுகிறார்.