Home நாடு விக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலத்தின் சில சுவாரசியங்கள்

விக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலத்தின் சில சுவாரசியங்கள்

1083
0
SHARE
Ad

(ஜூன் 22-ஆம் தேதியோடு தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலத்தின் சில சுவாரசிய சம்பவங்களை விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா!

மஇகாவின் உதவித் தலைவராகவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும், மத்திய செயலவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். மஇகாவின் வளர்ச்சிப் பயணத்தில் இந்திய முஸ்லீம்களின் பங்களிப்புகளின் இன்னொரு அடையாளம் உபைதுல்லா.

உபைதுல்லா
#TamilSchoolmychoice

செனட்டராக அவர் நீண்ட காலம் பணியாற்றியபோது, நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார் என்பது பலருக்கு ஆச்சரியமானத் தகவலாக இருந்திருக்கும்.

அப்போதெல்லாம் செனட்டர்களுக்கு எத்தனை ஆண்டுகள் பதவிகள் வகிக்கலாம் என்ற கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, பலர் விடாப்படியாக செனட்டர்களாகவே பல ஆண்டுகள் தொடர்ந்தார்கள். மகாதீர் பிரதமரானதும் அந்த நடைமுறையை மாற்றினார்.

செனட்டர் ஒருவர் ஒரு தவணைக்கு 3 ஆண்டுகள் என இரண்டு தவணைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்.

உபைதுல்லா செனட்டர் பதவியிலிருந்து விலகிய பின்னர், பெரும்பாலும் அம்னோ தலைவர்களே மக்களவை, மேலவை இரண்டுக்கும் அவைத் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும் பணியாற்றி வந்தனர்.

1986 பொதுத் தேர்தல் முடிந்ததும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன் மக்களவையின் துணை சபாநாயகராக (அப்போதைய மஇகா தேசியத் தலைவர்) துன் சாமிவேலுவின் சிபாரிசில் நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு, மக்களவை துணை சபாநாயகர் வாய்ப்பு மஇகாவிலிருந்து யாருக்கும் கிடைக்கவில்லை.

1990-ஆம் ஆண்டுகளில் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையே ஓர் உடன்பாடு காணப்பட்டது. நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி கூட்டணி கட்சிகளுக்கிடையே ஒரு தவணை வீதம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற உடன்பாடுதான் அது.

ஜி.வடிவேலு

அதைத் தொடர்ந்து அப்போது செனட்டராக இருந்த டான்ஸ்ரீ ஜி.வடிவேலுவுக்கு ஏப்ரல் 1992 முதல் ஜூன் 1995 வரை நாடாளுமன்ற மேலவைத் தலைவராகும்  வாய்ப்பு கிடைத்தது.

அடுத்த சுற்று வாய்ப்பு மஇகாவுக்கு வந்தபோது விக்னேஸ்வரன் செனட்டராக இருந்தார். வடிவேலுவைப் போலவே சட்டப் படிப்பு பின்னணியும் இருந்ததாலும், மஇகா தலைமைத்துவத்தின் சிபாரிசாலும் 2016-ஆம் ஆண்டில் மேலவைத் தலைவராக நியமனம் பெற்றார் விக்னேஸ்வரன்.

மூன்று மாமன்னர்கள், மூன்று அரசாங்கங்கள், மூன்று மஇகா தலைமைத்துவ மாற்றங்கள்…

விக்னேஸ்வரனின் ஆறு ஆண்டுகால செனட்டர் பதவிக் காலமும், நான்கு ஆண்டுகால மேலவைத் தலைவர் பதவிக் காலமும் சில சுவாரசியங்களைக் கொண்டது.

அவரை செனட்டராக ஜூன் 2014-ஆம் ஆண்டில் நியமித்தவர் அப்போதைய மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல். ஆனால், மேலவைத் தலைவராக நியமனம் பெறும்போது தேசியத் தலைவராகியிருந்தவர் டாக்டர் சுப்பிரமணியம்.

இப்போது, விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராகப் பதவி விலகும்போது மஇகாவின் தலைமைத்துவமும் மாறி அவரே தேசியத் தலைவராகி விட்டார்!

அடுத்த சுவாரசியம், அவரை மேலவைத் தலைவராக நியமித்தது தேசிய முன்னணி அரசாங்கம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2018-ஆம் ஆண்டில் தேசிய முன்னணி அரசாங்கம் பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பதவியேற்றபோதும் அவரே மேலவைத் தலைவராகத் தொடர்ந்தார்.

இப்போது, பதவி விலகிச் செல்லும்போது நாட்டின் ஆட்சியில் இருப்பது மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம்.

ஆக மூன்று மத்திய அரசாங்கங்களின் ஊடே, அவர் நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பதவி வகித்திருக்கிறார்.

மூன்று மாமன்னர்கள்…

திங்கட்கிழமை (மே 18) நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வருகை தந்த மாமன்னரை வரவேற்கும் விக்னேஸ்வரன்

விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராக பதவியேற்கும் காலகட்டத்தில் மாமன்னராக கெடா சுல்தான் இருந்தார். 2016 டிசம்பரில் கெடா சுல்தான் பதவிக் காலம் முடிந்து விடைபெற்றுச் செல்ல, மாமன்னராக கிளந்தான் சுல்தான் அரியணை அமர்ந்தார்.

ஆனால், ஐந்தாண்டு தவணைக் காலம் நிறைவடையும் முன்னரே சொந்தப் பிரச்சனைகளால் மன்னர் பதவியைத் துறந்தார் கிளந்தான் சுல்தான்.

தற்போதைய மாமன்னராக பகாங் சுல்தான் பதவி வகித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் மேலவைத் தலைவராகத் தொடர்கிறார் விக்னேஸ்வரன். மூன்று மாமன்னர்களின் கீழ் மேலவைத் தலைவராக பணியாற்றும் அரிய வாய்ப்பு பெற்றவர் விக்னேஸ்வரன்.

மூன்று பிரதமர்கள் கீழ் மேலவைத் தலைவராக…

விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராகப் பதவியேற்கும்போது பிரதமராக இருந்தவர் நஜிப் துன் ரசாக். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது பிரதமராகப் பதவியேற்றவர் துன் மகாதீர்.

விக்னேஸ்வரன் இன்று பதவி விலகிச் செல்லும்போது பிரதமராக இருப்பவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்.

ஆக மூன்று மாமன்னர்கள் என்பது மட்டுமின்றி, மூன்று பிரதமர்களின் கீழ் மேலவைத் தலைவராக பதவி வகித்த பெருமைக்கும் உரியவர் விக்னேஸ்வரன்.

மூன்றாண்டுகளுக்கும் கூடுதலாக நீடித்த மேலவைத் தலைவர் பதவி

விக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டதில் இன்னொரு சுவாரசியமும் உண்டு.

2018 மே மாத தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் தோல்வியடைவில்லை, ஆட்சியில் தொடர்ந்தது என்று வைத்துக் கொள்வோம். 2016 ஏப்ரலில் மேலவைத் தலைவராகப் பதவியேற்ற விக்னேஸ்வரனின் பதவிக் காலம் மூன்றாண்டுகளில், 2019 ஏப்ரல் மாத வாக்கில் முடிவுக்கு வந்திருக்கும்.

தேசிய முன்னணி உடன்பாட்டின்படி தேசிய முன்னணியின் வேறொரு உறுப்பியக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஒருவர் மேலவைத் தலைவராகியிருப்பார்.

ஆனால், 2018-இல் ஆட்சிக்கு வந்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் விக்னேஸ்வரனை நீக்க முடியவில்லை. காரணம், மக்களவையில் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மை கொண்டிருந்தாலும், மேலவையில் அப்போதும் இப்போதும் தேசிய முன்னணியே பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது.

இப்போதுகூட, எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதியோடு விக்னேஸ்வரனின் இரண்டாவது தவணை செனட்டர் பதவிக் காலம்தான் முடிவுக்கு வருகிறதே தவிர, நாடாளுமன்றத் தலைவர் பதவியல்ல!

அதனால்தான் அவர் மேலவைத் தலைவர் பதவியைத் துறக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

ஜூன் 22-க்குப் பிறகு தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்துக்குத் தயாராகவிருக்கும் விக்னேஸ்வரனுக்கு, தேசியக் கூட்டணி அரசாங்கம் எந்தப் பதவியை வழங்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள மஇகாவினரும், இந்திய சமூகமும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

-இரா.முத்தரசன்