கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலேசிய சுகாதார அமைச்சின் சார்பில் அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
நேற்று 6 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் இன்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்திருக்கிறது.
அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை.
எனவே, இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக இருந்து வருகிறது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 14 சம்பவங்களில் 10 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். எஞ்சிய 4 பேர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்களாவர்.
உள்நாட்டில் தொற்று கண்டவர்களில் பெரும்பாலோர் சபா, லகாட் டத்துவிலிருந்து பரவிய பெந்தெங் எல்டி என்ற தொற்றுத் திரள் குழுவின் ஒரு பகுதியினராவர். லகாட் டத்து காவல் நிலைய தடுப்புக் காவல் மையத்திலிருந்து பரவிய இந்தத் தொற்றுத் திரள் முதன் முதலாக செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இன்று அறிவிக்கப்பட்ட தொற்றுகளில் 6 சம்பவங்கள் பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் தொடர்புடையதாகும். இந்த அறுவரும் தாவாவ் சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்டனர்.
லகாட் டத்து தடுப்பு மையத்தில் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஒருவர், தாவாவ் சிறைச்சாலையில் இருந்த கைதி என்பது உறுதிப்பட்டிருப்பதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,374 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,083 ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டில் மொத்தம் 163 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 3 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து தொற்று கண்ட நால்வரில் இருவர் மலேசியர்கள். ஒருவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஜோகூரைச் சேர்ந்தவர்.
மற்ற இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். மற்றொருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.