Home One Line P2 அக்‌சய் குமார் : தினமும் “கோமியம்” அருந்துகிறார்

அக்‌சய் குமார் : தினமும் “கோமியம்” அருந்துகிறார்

727
0
SHARE
Ad

மும்பை : பிரபல பாலிவுட் நட்சத்திரம் அக்சய் குமார் தினமும் கோமியம் என அழைக்கப்படும் பசுவின் சிறுநீரை அருந்தி வருவதாக அறிவித்திருக்கிறார்.

கோமியம் என்பது இந்துக்களிடையே புனிதமாகக் கருதப்படுவதாகும். இந்துக்களின் எல்லா முக்கிய பூசைகள், பாரம்பரிய நிகழ்ச்சிகளிலும் கோமியம் ஏதாவது ஒரு வகையில் இடம் பெறும்.

இந்தியாவில், குறிப்பாக கிராமப் புறங்களில் கோமியம் என்பது பலவகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கோமியமும், மஞ்சளும் கலந்த கலவை நீர் இல்லங்களின் வாசல்களைச் சுற்றித் தெளிக்கப்படுவது வழக்கம். இத்தகையக் கலவை சிறந்த கிருமி நாசினியாகக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தியர்களில் பலர் கோமியத்தை மருத்துவ குணங்களுக்காக அருந்தி வருகின்றனர். ஆனால், அக்சய் குமார் போன்ற ஒரு திரைப்பட பிரபலம் முன்வந்து இவ்வாறு அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோமியம் கொவிட்-19 பாதிப்புகளை எதிர்க்கும் வல்லமை கொண்டது என்றும் சில தரப்புகள் வாதிடுகின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசாங்கம் பசுவின் சாணம், கோமியம் போன்றவற்றை மருத்துவ ரீதியாகப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடுகளை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

53 வயதான அக்சய் குமார் அண்மையில் பேர் கிரில்ஸ் என்ற பிரிட்டனின் காட்டு வள ஆராய்ச்சியாளர் தொலைக்காட்சி வழி நடத்தி வரும் டிஸ்கவரி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.  இதே போன்ற மற்றொரு நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமானது.

தான் கலந்து கொள்ளும் பேர் கிரில்ஸ் நிகழ்ச்சிக்கான முன்னோட்ட விளம்பர நிகழ்ச்சியில் அக்சய் குமார் கலந்து கொண்ட காணொலி அண்மையில் வெளியானது. இந்தியாவில் புலிகள் சரணாலயக் காடு ஒன்றில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

அப்போது பேர் கிரில்சும் அக்சய் குமாரும் யானையின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் பானத்தை அருந்தினர். அப்போது இருவரும் உரையாடும் காட்சியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

“ஆயுர்வேத மருத்துவக் காரணங்களுக்காக நான் தினமும் கோமியம் அருந்துகிறேன். அதனால் எனக்கு நோய் எதிர்ப்புச் சக்திக்குப் பிரச்சனையில்லை” என அக்சய் குமார் அப்போது கூறினார்.

ஆயுர்வேத மருத்துவம், யோகா போன்ற பிரிவுகளைக் கொண்ட அமைச்சு ஒன்றும் மோடியின் அரசாங்கத்தின் ஒரு பிரிவாக இயங்கி வருகிறது.

இந்தியாவைப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று காரணமாக அந்நாடு உலக அளவில் தற்போது அதிகத் தொற்றுகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4.8 மில்லியனைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 92,071 பேர் இந்த தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1,136 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.