Home One Line P1 செல்லியல் பார்வை : மலேசியா தினம் : உருவானது ஏன்? எப்படி?

செல்லியல் பார்வை : மலேசியா தினம் : உருவானது ஏன்? எப்படி?

4106
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆண்டுதோறும் சில நாடுகளில் சுதந்திர தினம் என்ற கொண்டாட்டம். சில நாடுகளிலோ தேசிய தினம் என்ற கொண்டாட்டம்.

ஆனால் மலேசியாவில் மட்டும் சுதந்திர தினம் என்றும் மலேசியா தினம் என்றும் ஏன் இரண்டு கொண்டாட்டங்கள்?

நமது சுதந்திர தினம் 31 ஆகஸ்ட் 1957 என்பது நமக்குத் தெரியும்.

#TamilSchoolmychoice

இன்று செப்டம்பர் 16-ஆம் தேதி  கொண்டாடப்படும் மலேசிய தினம் பல்வேறு சுவையான அரசியல் பின்னணிகளை கொண்டது. சுவாரசியமான வரலாற்று சம்பவங்களை கொண்டது.

அவற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

பிரிட்டனின் காலனித்துவ ஆட்சி தொடர்ந்த 4 பிரதேசங்கள்

மலாயாவுக்கு சுதந்திரம் வழங்கிய பின்னர் நமது நாட்டைச் சுற்றியிருந்த மேலும் நான்கு பிரதேசங்களில் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சி தொடர்ந்தது.

சிங்கப்பூர், சரவாக், புருணை, வட போர்னியோ ஆகியவைதான் அந்த நான்கு பிரதேசங்கள்.

இதில் வடபோர்னியோ அதாவது நோர்த் போர்னியோ என்று அழைக்கப்பட்ட பிரதேசம்தான் பின்னர் சபா மாநிலமாக பெயர் மாற்றம் கண்டது.

இந்த நான்கு பிரதேசங்களையும் மலாயாவுடன் இணைத்து மலேசியா என்ற ஒரே நாடாக உருவாக்க பிரிட்டன் முடிவெடுத்தது.

ஏறத்தாழ ஒரே மாதிரியான மண்வளம், பருவ நிலை, ஒரே மாதிரியான இனப்பிரிவுகளைக் கொண்ட மக்கள் தொகை என பல ஒற்றுமைகளை இந்தப் பிரதேசங்கள் கொண்டிருந்தன.

அடுத்தடுத்து எல்லைகள் கொண்ட பூகோள அமைப்பு இவற்றை இணைப்பதற்கான இன்னொரு காரணம்.

பொதுவாக்கெடுப்பின் வழி இணைந்த சிங்கப்பூர் – இணையாத புருணை

1 செப்டம்பர் 1962ஆம் ஆண்டில் மலேசியாவில் இணைவதா என்ற முடிவை எடுக்க பொது வாக்கெடுப்பு நடத்தியது சிங்கப்பூர். அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு இருந்ததால் சிங்கப்பூர் மலேசியாவில் இணைந்தது.

சபா, சரவாக் இரண்டு மாநிலங்களிலும் பொதுவாக்கெடுப்பு அவ்வாறு நடத்தப்படவில்லை. மாறாக, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஒத்துழைப்புடன் ஆய்வுகளும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.

இந்த இரண்டு பிரதேசங்களும் சில நிபந்தனைகளுடன் மலேசியாவில் இணைய ஒப்புக்கொண்டன.

ஆனால் புருணையில் மட்டும் மலேசியாவில் இணையக் கூடாது என உள்நாட்டுப் போராட்டங்கள் வெடித்தன. அதன் காரணமாக அப்போதைய புருணை ஆட்சியாளர் சுல்தான் ஓமார் அலி சைபுடின் மலாயாவில் இணைவதில்லை என்ற முடிவை பிரிட்டனிடம் தெரிவித்தார்.

இன்றைய புருணை சுல்தான் ஹசனால் போல்கியாவின் தந்தைதான் அப்போது ஆட்சியாளராக இருந்த ஓமார் அலி சைபுடின்.

தொடர்ந்து பிரிட்டனின் பாதுகாப்பில் இருந்த புருணை 1984-இல் தான் தனிநாடாக சுதந்திரம் பெற்றது.

மலேசியா உருவானது

சிங்கப்பூர், சபா, சரவாக் ஆகிய மூன்று பிரதேசங்கள் மலாயாவுடன் இணைந்து மலேசியா என்ற நாடாக உருவாக்கம் பெற்றன.

இதற்காக “மலேசியா மசோதா” (“Malaysia Bill”) என்ற புதிய சட்டம் உருவானது. 1963 இல் மலாயா நாடாளுமன்றம் இந்த சட்டத்தை அங்கீகரித்தது.

“மலேசியா ஒப்பந்தம் 1963” (Malaysia Agreement 1963) என்ற பெயரிலான ஒப்பந்தம் 9 ஜூலை 1963-இல் இலண்டனில் கையெழுத்திடப்பட்டது.

மலேசியாவில் இணைய சபா, 20 அம்ச வரைவுத்திட்டத்தை முன் வைத்தது. சரவாக் 18 அம்சங்களைக் கொண்ட வரைவுத் திட்டத்தை முன்வத்தது.

இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவற்றில் பெரும்பான்மையானவை மலேசிய அரசியலமைச் சட்டத்திலும் இணைக்கப்பட்டன. சில நிபந்தனைகள் கொள்கை அளவில் அமுல்படுத்தப்பட இணக்கம் காணப்பட்டன.

அதைத் தொடர்ந்து “மலேசியா” என்ற நாடு பிரகடனப்படுத்தப்பட்ட நாள்தான் 16 செப்டம்பர் 1963. இன்று நாம் கொண்டாடும் மலேசியா தினம்.

மலாயாவின் சார்பில் கையெழுத்திட்ட துன் சம்பந்தன்

“மலேசியா ஒப்பந்தம்” ஆவணத்தில் அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் மலாயாவின் சார்பில் கையெழுத்திட்ட ஆறு தலைவர்களில் மஇகா தேசியத் தலைவர் துன் சம்பந்தனும் ஒருவர். இதுவும் நமது பெருமையை உணர்த்தும் இன்னொரு அம்சம்.

ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்துடன் சிங்கப்பூருக்கு கருத்து மோதல்கள் ஏற்பட்டது. 9 ஆகஸ்ட் 1965 முதல் சிங்கப்பூர், மலேசியா ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேறி தனிநாடாக இயங்கி வருகிறது.

இத்தனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலேசிய தினம் 2010 வரை மலேசியாவில் பொது விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது இல்லை.

சபா சரவாக் மாநிலங்களில் மட்டுமே மலேசிய தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்பட்டது.

கால ஓட்டத்தில் மலேசியா ஒப்பந்தத்தின் அம்சங்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் அரசியல் மாற்றங்கள் நிலைமையை தலைகீழாக மாற்றின. சபா, சரவாக் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை அந்தத் தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கு உணர்த்தின. மலேசிய ஒப்பந்தத்தின் 20 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற அறைகூவல்கள் வலுக்கத் தொடங்கின.

2010-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் மலேசியா தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தினார்.

2018-இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், அதைத் தொடர்ந்து 2020-இல் நிகழ்ந்த தேசியக் கூட்டணி தலைமையிலான அரசாங்க மாற்றம், சபா, சரவாக் மாநிலங்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

இன்றைக்கு மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்தை முதுகெலும்பாகத் தாங்கிக் கொண்டிருப்பதே சரவாக் ஜிபிஎஸ் கூட்டணிதான் என்பதையும் அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.

சபா மாநில முதல்வர் ஷாபி அப்டால் அடுத்த பிரதமராக முன்மொழியப்பட்டு விவாதங்கள் தொடரும் அளவுக்கு கிழக்கு மலேசிய மாநிலங்களின் முக்கியத்துவம் இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக, 2020-இல் கொண்டாடப்படும் மலேசியா தினமும் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொண்டாடப்படுகிறது.

-இரா.முத்தரசன்

மேற்காணும் செல்லியல் பார்வை கட்டுரையின் காணொலி வடிவத்தைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: