பெட்டாலிங் ஜெயா – இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) காலை தலைநகரிலும், பெட்டாலிங் ஜெயாவிலும் அடுத்தடுத்து நடந்தேறிய அரசியல் சந்திப்புக் கூட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் துன் மகாதீர் தலைமையில் அம்னோ-பாஸ்- கூட்டணியோடு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்ற ஆரூடங்கள் வலுவடைந்து வருகின்றன.
மாமன்னரின் அரண்மனையில் சில அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குழுமியுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெராட்டன் தங்கும் விடுதியில் மகாதீருக்கு ஆதரவான அரசியல் தலைவர்கள் குழுமத் தொடங்கியுள்ளனர்.
2018 மே மாதத்தில் பொதுத் தேர்தலின் வழி ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இதே ஷெராட்டன் தங்கும் விடுதிதான் அரசியல் சதுராட்டங்களின் மையமாகத் திகழ்ந்தது என்பது இந்த வேளையில் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு ஆரூடங்கள் தீ போல பரவி வரும் நிலையில், எல்லாமே மிகவும் இரகசியமாக நடைபெற்று வருகின்றன. எந்த அரசியல் தலைவரும் இதுவரையில் வாய்திறந்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.