வாஷிங்டன் – இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கான வேட்பாளர் யார் என்பதற்கான போட்டியில் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் (படம்) முந்துவதாக ஆகக் கடைசியான வாக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ரிபப்ளிக் எனப்படும் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இம்பீச்மெண்ட் எனப்படும் அவரது நம்பகத்தன்மை குறித்த தீர்மானம் செனட் எனப்படும் அமெரிக்க மேலவையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் அதிபர் தேர்தலில் நிற்பதற்கு இனி தடை ஏதும் இல்லை.
எனினும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற இழுபறி நிலை இன்னும் நீடித்து வருகிறது.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், பெர்னி சாண்டர்ஸ் ஆகிய இருவரும் முன்னணி வகிக்கும் நிலையில் ஜோ பிடனைப் பின்னுக்குத் தள்ளி தற்போது பெர்னி சாண்டர்ஸ் முன்னணி வகிக்கத் தொடங்கியிருக்கிறார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களில் மற்றொரு முக்கிய வேட்பாளராக மைக்கல் புளும்பெர்க் பார்க்கப்பட்டாலும், சில கருத்துக் கணிப்புகளில் அவர் முந்தியிருந்தாலும், தற்போது அவரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
பெரும் பணக்காரரான மைக்கல் புளும்பெர்க் மில்லியன் கணக்கான டாலர் செலவில் செய்த விளம்பரங்களின் காரணமாக அவருக்கு இந்த பிரபல்யமும் செல்வாக்கும் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற நெவாடா மாநில ஜனநாயகக் கட்சித் தேர்தல்களில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜோ பிடனை விட அதிகமானப் புள்ளிகளில் முன்னணியில் இருக்கிறார் பெர்னி.