கோலாலம்பூர்: இன்று இரவு நள்ளிரவு முதல் சபாவில் நான்கு மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
லாஹாட் டாத்து, தாவாவ், குனாக் மற்றும் செம்போர்னா ஆகிய மாவட்டங்களில் இந்த ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ சப்ரி இஸ்மாயில் யாகோப் தெரிவித்தார்.
“கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செப்டம்பர் 29 நள்ளிரவு 12.01 முதல் அக்டோபர் 12 வரை செயல்படும். மேலும் மொத்தம் 962,661 பேர் இதில் ஈடுபடுவார்கள்” என்று அவர் கூறினார்.
இந்த மாதத்தில் நான்கு மாவட்டங்களில் 1,195 கொவிட்19 சம்பவங்கள் பதிவாகிய பின்னர் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தியதாக இஸ்மாயில் கூறினார்.
செப்டம்பர் ஒன்று முதல் 27 வரை, லாஹாட் டாத்துவில் 241 சம்பவங்கள், தாவாவ் (634 சம்பவங்கள்), குனாக் (65 சம்பவங்கள்) மற்றும் செம்போர்னா (255 சமபவங்கள்) பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
அங்குள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.