கோத்தா கினபாலு: சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் இன்று மாலை சபா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
மாநில ஆளுநர் ஜூஹார் மஹிருடினிடமிருந்து கடிதத்தைப் பெறுவதற்காக ஹாஜிஜி இன்று மாலை 4 மணியளவில் மாநில அரண்மனைக்கு வந்ததாக சபா தகவல் துறை தெரிவித்துள்ளது.
“அழைப்புக் கடிதம் வழங்கப்பட்ட உடனேயே, நாளை காலை 10 மணிக்கு மாநில அரண்மனை மண்டபத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவின் ஒத்திகையிலும் ஹாஜிஜி கலந்து கொண்டார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சபா முதலமைச்சர் பதவி குறித்து பெர்சாத்து- அம்னோ இடையே போட்டா போட்டிகள் இருந்து வந்த நிலையில், வேறொரு கட்சியிடம் ஒப்படைக்க அம்னோ தயாராக இல்லை என்று தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருந்தார்.
புதிய மாநில முதலமைச்சராக சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடினை முன்மொழிந்து சபா மாநில ஆளுநர் ஜூஹார் மஹிருடினுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சாஹிட் கூறியிருந்தார்.
பெர்சாத்து கட்சிக்கு தேசிய முன்னணி இரு முறை வழிவிட்டதாக, அதாவது, பேராக் மாநில முதலமைச்சர் பதவி மற்றும் பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
பேராக்கில் பெர்சாத்து 4 தொகுதிகளுடன் இருக்கும்போது, அம்னோவிற்கு 25 சட்டமன்றங்கள் இருப்பதாக அவர் கூறினார். ஆனால், அகமட் பைசால் அசுமுவை முதல்வராக அவர்கள் நியமிக்க ஒப்புக்கொண்டனர்.
மேலும், பெர்சாத்துவுக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றாலும், மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்க அம்னோ மற்றும் ஜிபிஎஸ் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
சாஹிட் ஹமிடியின் இந்த அறிக்கைக்குப் பிறகு, பெர்சாத்துவின் ஹாஜிஜி நூர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.