புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 82,170 புதிய கொவிட்19 தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பின்னர், இந்தியாவின் தொற்று எண்ணிக்கை திங்களன்று 6 மில்லியனைக் கடந்தது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி 6.1 மில்லியன் பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்னும் சில வாரங்களில் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, அமெரிக்காவை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்19 இறப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 1,039 அதிகரித்து 95,542- ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து அதிகமான தினசரி தொற்றுச் சம்பவங்களைத் தொடங்கியதிலிருந்து, இந்தியா ஒவ்வொரு நாளும் 80,000 முதல் 90,000 புதிய தொற்று நோய்களை பதிவு செய்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
“இந்த விதிகள் கொவிட்19- க்கு எதிரான போரில் முக்கிய ஆயுதம். அது ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் காப்பாற்றுவதற்கான சக்திவாய்ந்த கருவி ” என்று மோடி தனது மாதாந்திர வானொலி உரையில் கூறினார்.
இந்த தொற்று ஆரம்பத்தில் மும்பை மற்றும் தலைநகர் புது டில்லி உள்ளிட்ட பெரிய பெருநகரங்களைத் தாக்கியது. ஆனால், அதன் பின்னர் மாகாண மற்றும் கிராமப்புறங்களில் பரவியுள்ளது.
நோயின் தொடர்ச்சியான பதிவுகள் இருந்தபோதிலும், கடுமையான கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைப் பாதித்து, மில்லியன் கணக்கான மக்களின், குறிப்பாக ஏழைகளின் வாழ்வாதாரத்தை முடக்கியதால், அரசு ஊரடங்கை மீண்டும் செயல்படுத்த வாய்ப்பில்லாமல் போனது.