கோலாலம்பூர்: தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மூன்று இலக்க கொவிட்19 தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று 115 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 112 சம்பவங்கள் உள்ளூர் தொற்றுகளாகும். மேலும், 3 தொற்றுகள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
இன்று பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் சபாவில் 98 சம்பவங்கள், சிலாங்கூர் (11 சம்பவங்கள்), திரெங்கானு (1), கெடா (1) சம்பவங்கள் பதிவாகின. உள்ளூர் சம்பவங்களில் 11 சபாவுக்கு பயணம் செய்த வரலாறு உள்ளது.
இதனால், நாட்டில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 11,034- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இன்று 54 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கபட்ட நிலையில், மொத்தமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,889- ஆக உயர்ந்துள்ளது.
1,011 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் என்மர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.