Home One Line P1 ‘சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன்’- சாஹிட் ஹமிடி

‘சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன்’- சாஹிட் ஹமிடி

557
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய முதலமைச்சராக ஹாஜிஜி முகமட் நூரை நியமிப்பதில் மற்ற காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) உறுப்பியக் கட்சிகளுடன் உடன்பட்ட சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன் என்று தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கூறினார்.

முன்னதாக, அதிக எண்ணிக்கையிலான மாநில தொகுதிகளை வென்ற தனிக் கட்சியாக சபா முதலமைச்சர் பதவியை அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சாஹிட் கூறியிருந்தார்.

“வென்ற ஜிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னர் சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் எனக்கு இதனை தெரிவித்தார். இறுதியாக ஹாஜிஜி முகமட் நூரை நியமிக்க ஒப்புக் கொண்டார். முந்தைய வாரிசான் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட சபா மக்களின் நலன்களை எதிர்த்துப் போராட முடியும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். சபா அம்னோவின் இந்த முடிவை நான் மதிக்கிறேன். ஜிஆர்எஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சபா மக்களின் நலன்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும்” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சபாவில் தேசிய முன்னணியைச் சேர்ந்த வேட்பாளர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று சாஹிட் குறிப்பிட்டிருந்தார்.

பெர்சாத்து கட்சிக்கு தேசிய முன்னணி இரு முறை வழிவிட்டதாக, அதாவது, பேராக் மாநில முதலமைச்சர் பதவி மற்றும் பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

பேராக்கில் பெர்சாத்து 4 தொகுதிகளுடன் இருக்கும்போது, அம்னோவிற்கு 25 சட்டமன்றங்கள் இருப்பதாக அவர் கூறினார். ஆனால், அகமட் பைசால் அசுமுவை முதல்வராக அவர்கள் நியமிக்க ஒப்புக்கொண்டனர்.

மேலும், பெர்சாத்துவுக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றாலும், மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்க அம்னோ மற்றும் ஜிபிஎஸ் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

“எங்களைப் பொறுத்தவரை, தேசிய முன்னணி (சட்டமன்ற உறுப்பினர்) சபாவின்  முதலமைச்சராக நியமிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தேசிய முன்னணிக்கு அது பெரும் இழப்பாக இருக்கும்.

“முதலமைச்சர் பதவிக்கு தேசிய முன்னணியைத் தவிர வெளியே மற்றவர்களுக்கு புங் விட்டுக் கொடுப்பதை நான் ஏற்கவில்லை ” என்று அந்த அறிக்கையில் சாஹிட் கூறியிருந்தார்.

இதற்கிடையில், காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) சுலாமான் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜிஜி நூரை சபா முதல்வராக நியமிக்க ஒப்புக் கொண்டதாக அறிவிப்பு வெளியானது.  நாளை செவ்வாய்க்கிழமை அவர் பதவியேற்கவுள்ளார்.

இந்த விவகாரத்தை ஹாஜிஜி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். இதில் சபா அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் கலந்து கொண்டார்.

“சபா முதலமைச்சராக ஹாஜிஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஜி.ஆர்.எஸ்ஸின் ஒருமித்த கருத்து மற்றும் உடன்பாட்டுடன் எட்டப்பட்டது” என்று புங் மொக்தார் கூறினார்.