கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா உடல்நிலை இப்போது சீரான நிலையில் இருப்பதாகவும், நச்சு உணவு அகற்றும் சிகிச்சைக்குப் பிறகு கவலை ஏதும் இல்லை என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அவர் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்ட பின்னர் இஸ்தானா நெகாரா இதனை தெரிவித்தது.
செப்டம்பர் 21- ஆம் தேதி இரவு தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டபோது, நச்சு உணவு அகற்றும் சிகிச்சை தொடங்கியது என்று அரண்மனைக் காப்பாளர் டத்தோ பெங்கேலோலா பிஜயா டிராஜா, அகமட் பாடில் ஷாம்சுடின் தெரிவித்தார்.
“அல்-சுல்தான் அப்துல்லாவின் முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளில் சிகிச்சை செப்டம்பர் 24 அன்று வெற்றிகரமாக நடந்தது. அவர் இப்போது நலமாக இருக்கிறார், கவலைப்பட ஏதுமில்லை” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை மாமன்னர் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக இஸ்தானா நெகாரா தெரிவித்நது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு (செப்டம்பர் 23) புதிய அரசாங்கத்தை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.