Home One Line P1 சபா : ஷாபி இல்லத்தில் ஆலோசனைகள்! இறுதி நேர கட்சித் தாவல்களா?

சபா : ஷாபி இல்லத்தில் ஆலோசனைகள்! இறுதி நேர கட்சித் தாவல்களா?

877
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, சபா அரசியலில் அதிர்ச்சிகளும், கட்சித் தாவல்களும் இன்னும் மிச்சமிருக்கலாம்

ஷாபி அப்டால் இன்னும் வாரிசான் கட்சியின் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. அவரது இல்லத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குவிந்து வருவதாகவும், பலரிடம் சத்தியப் பிரமாண ஆதரவுக் கையெழுத்துகள் பெறப்படுவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை செவ்வாய்க்கிழமை ஜிஆர்எஸ் எனப்படும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி சார்பில் ஹாஜிஜி முகமட் நூர் முதலமைச்சராகப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஹாஜிஜி முகமட் நூர் அடுத்த முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னால், அதைத் தடுப்பதற்கு ஷாபி அப்டால் இறுதி நேர முயற்சிகளை எடுக்கக் கூடும் என கருதப்படுகிறது.

மிகக் குறுகிய பெரும்பான்மையையே ஹாஜிஜி முகமட் நூர் கொண்டிருப்பதால் சில கட்சிகளின் ஆதரவு நிலைப்பாடு மாறினால், அவர் முதலமைச்சராகப் பதவியேற்பதில் இடையூறுகள் ஏற்படும்.

உதாரணமாக, சுயேச்சை உறுப்பினர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால், ஷாபியின் வாரிசான் அணியின் பலம் 35 ஆக உயரும்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் சபா மாநிலக் கட்சிகளான பிபிஎஸ் 7 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஸ்டார் கட்சி 6 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. இதில் ஏதாவது ஒரு கட்சி ஷாபிக்கு ஆதரவு கொடுத்தாலும் அவர் பெரும்பான்மையைப் பெற்று விட முடியும்.

அதைவிட முக்கியமாக, 14 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அம்னோவையும் நம்ப முடியாது. ஹாஜிஜி முகமட் நூர் முதலமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்னோ உறுப்பினர்கள் கட்சி தாவினாலும், தங்களின் ஆதரவை மாற்றிக் கொண்டாலும் சபாவின் அரசியல் நிலைமை மாறும்.

எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் சபா தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

கட்சித் தாவலும் சபா அரசியலுக்கே உரிய இலக்கணமாகும்.

எனவே, அப்படியே ஹாஜிஜி முகமட் நூர் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டாலும் இந்த நிலையற்ற தன்மையும், இழுபறியும் சபா அரசியலில் நீடித்துக் கொண்டே இருக்கும்.