Home One Line P1 ஒரு வாரத்திற்கு மாமன்னர் யாரையும் சந்திக்க இயலாது

ஒரு வாரத்திற்கு மாமன்னர் யாரையும் சந்திக்க இயலாது

527
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் இந்த ஒரு வாரத்தில் யாரையும் சந்திக்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார் என்று தேசிய அரண்மனை அதிகாரி கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கத்தை அமைக்க இருப்பது குறித்த விவகாரம் தொடர்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மொகிதின் யாசினைக் கவிழ்க்க மக்களவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து “வலுவான, உறுதியான” பெரும்பான்மையைப் பெற்றதாக அன்வார் புதன்கிழமை கூறியிருந்தார். ஆனால் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு போதுமான ஆதரவு இருப்பதை அவர் மாமன்னரிடம் அறிவிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசின் பிரதமரான 7 மாதத்தை அடுத்து மேலும் ஒரு புதிய அதிகாரப் போராட்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு இடையூறாக அமையும் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் குறுகிய பெரும்பான்மையைக் கொண்ட மொகிதின், அன்வாருக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படும் கூற்றினை நிராகரித்து, அரசியலமைப்புச் செயற்பாட்டின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க சவால் விடுத்தார்.

“மாட்சிமை தங்கிய பேரரசர் மருத்துவர்களால் (மருத்துவமனையில்) ஏழு நாட்கள் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“அதுவரை அவர் யாருடைய சந்திப்பையும் ஏற்க மாட்டார்” என்று அரண்மனை மேலாளர் அகமட் பாடில் ஷாம்சுடின் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

முன்னதாக, அன்வார் மாமன்னரை சந்திக்க இருந்ததை அரண்மனை உறுதிப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மாமன்னர் உடனான அன்வார் இப்ராகிம், வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்தானா நெகாரா தெரிவித்திருந்தது.

தனது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து மக்களுக்கும், பிரதமர், டான்ஸ்ரீ மொகிதி யாசின், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அன்வார் உள்ளிட்ட அனைத்து நபர்களுக்கும் நன்றி தெரிவித்ததாக அரண்மனை மேலாளர் அகமட் பாசில் தெரிவித்திருந்தார்.