Home One Line P1 மாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை!

மாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை!

1692
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் உடனான பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்தானா நெகாரா உறுதிப்படுத்தியது.

மாமன்னர் உடல் நலப் பிரச்சனையால் அதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்று அரண்மனை மேலாளர் டத்தோ பெங்கெலொலா பிஜயா டிராஜா, டத்தோ இந்திரா அகமட் பாசில் சம்சுடின் தெரிவித்தார்.

தேசிய இருதய சிகிச்சை மைய நிபுணர்களின் மேற்பார்வையில் சுல்தான் அப்துல்லா தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அல்-சுல்தான் அப்துல்லா அனைத்து குடிமக்களையும் அமைதியாகவும், அவர்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளவும் தரமான செயல்பாட்டு நடைமுறைகளை கடைப்பிடிக்கவும் கேட்டுக் கொண்டார். ஏனெனில் நாடு இன்னும் கொவிட்19 தொற்றுநோயின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது”

“அல்-சுல்தான் அப்துல்லா அனைத்து தரப்பினரிடமும் நாம் ஒன்றாக நேசிக்கும் நாட்டின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும்படி கூறினார்”

“மலேசியா தொடர்ந்து அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீடித்த செழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்ய அனைத்து மக்களும் மாமன்னருடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்,” என்று அவர் கூறினார்.

தனது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து மக்களுக்கும், பிரதமர், டான்ஸ்ரீ மொகிதி யாசின், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அன்வார் உள்ளிட்ட அனைத்து நபர்களுக்கும் நன்றி தெரிவித்ததாக அகமட் பாசில் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அன்வார் தனக்கு வலுவான மற்றும் உறுதியான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறினார். ஆனால், அவருக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் ஆதரவை முதலில் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் ஒப்படைப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார்.

“ஆதரவு வலுவானது மற்றும் உறுதியானது. நான்கு, ஐந்து அல்லது ஆறு அல்ல, ஆனால் அதிகமான பெரும்பான்மை” என்று அவர் கூறினார்.

தேசிய கூட்டணியின் தலைவர்கள் அன்வாரின் குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தனது கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவருக்கு ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இதேபோன்ற வளர்ச்சியில், அமானா மற்றும் ஜசெக புதிய அரசாங்கத்தை அமைக்க அன்வாருக்கு போதுமான ஆதரவு இருந்தால், தங்கள் கட்சி அவரை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளன.