கோலாலம்பூர்: சபா முதலமைச்சர் பதவியை வேறொரு கட்சியிடம் ஒப்படைக்க அரசு தயாராக இல்லை என்று தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
புதிய மாநில முதலமைச்சராக சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடினை முன்மொழிந்து சபா மாநில ஆளுநர் ஜூஹார் மஹிருடினுக்கு கடிதம் எழுதியுள்ளதாக சாஹிட் கூறினார்.
பெர்சாத்து கட்சிக்கு தேசிய முன்னணி இரு முறை வழிவிட்டதாக, அதாவது, பேராக் மாநில முதலமைச்சர் பதவி மற்றும் பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
பேராக்கில் பெர்சாத்து 4 தொகுதிகளுடன் இருக்கும்போது, அம்னோவிற்கு 25 சட்டமன்றங்கள் இருப்பதாக அவர் கூறினார். ஆனால், அகமட் பைசால் அசுமுவை முதல்வராக அவர்கள் நியமிக்க ஒப்புக்கொண்டனர்.
மேலும், பெர்சாத்துவுக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றாலும், மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்க அம்னோ மற்றும் ஜிபிஎஸ் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
“எங்களைப் பொறுத்தவரை, தேசிய முன்னணி (சட்டமன்ற உறுப்பினர்) சபாவின் முதலமைச்சராக நியமிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தேசிய முன்னணிக்கு அது பெரும் இழப்பாக இருக்கும்.
“முதலமைச்சர் பதவிக்கு தேசிய முன்னணியைத் தவிர வெளியே மற்றவர்களுக்கு புங் விட்டுக் கொடுப்பதை நான் ஏற்கவில்லை ” என்று அந்த அறிக்கையில் சாஹிட் கூறினார்.
ஜி.ஆர்.எஸ் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய பல மணி நேரம் கூட்டம் நடத்திய பின்னர் தேசிய கூட்டணி, தேசிய முன்னணி தலைவர்கள் நேற்று ஓர் உடன்பாட்டை எட்டினர்.