கோலாலம்பூர்: பெட்டாலிங், ஹுலு லாங்காட், கோலா லாங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 273 இடங்களில் 300,000- க்கும் மேற்பட்டோர் நீர் விநியோகத் தடையை எதிர் நோக்கி வருகின்றனர். சுங்கை செமினியில் மாசு இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இது மொத்தம் 309,605 வீட்டைப் பாதித்துள்ளது என்று சாரிகட் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஆயர் சிலாங்கூரை, சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் ஆகிய இடங்களில் உள்ள அதன் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நடவடிக்கைகளை நிறுத்த நிர்பந்தித்துள்ளது.
சுங்கை செமினி மற்றும் அருகிலுள்ள துணை நதிகளில் மாசுபடுவதற்கான காரணத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அது கூறியது. இன்னும் மாசுக்கான அடையாளங்கள் உள்ளதால் அது முழுமையாக செயல்படாது என்று அது கூறியுள்ளது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு உதவ வசதியாக ஆயர் சிலாங்கூர் தனது அவசரகால உதவி நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.
“தற்போது, பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை மீண்டும் தொடங்குவதற்கும், நீர் விநியோகம் மறுசீரமைப்பதற்கும் உள்ள காலத்தை எங்களால் அடையாளம் காண முடியவில்லை.
“ஆயர் சிலாங்கூர் இந்த சம்பவம் குறித்த தகவல்களை அனைத்து தளங்களிலும், குறிப்பாக ஊடகங்களில் அவ்வப்போது வழங்கும்” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.