Home One Line P1 ‘மொகிதின், நஜிப் போல செயல்படுகிறார்- இணைந்து பணியாற்ற முடியாது’- மகாதீர்

‘மொகிதின், நஜிப் போல செயல்படுகிறார்- இணைந்து பணியாற்ற முடியாது’- மகாதீர்

583
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், மொகிதின் யாசினுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். பெர்சாத்து தலைவரான அவர் தனது கொள்கைகளை கைவிட்டு, நஜிப் ரசாக் பயன்படுத்திய அதே செயல்முறையை செயல்படுத்துவதாகக் கூறினார்.

“மொகிதின், அவரை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் பலவீனப்படுத்த நஜிப் பயன்படுத்திய செயல்முறையை செயல்படுத்தியுள்ளார்.

“மொகிதினை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

“கொள்கையை விட அரசியல் முக்கியமானது” என்பதால் பிரதமராக இருக்கும் மொகிதின், நஜிப்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் மகாதீர் கூறினார்.

நஜிப் அம்னோ தலைவராகவும், பிரதமராகவும் இருந்தபோது மொகிதின் அம்னோ துணைத் தலைவராக இருந்தார்.

1எம்டிபி நிதி ஊழலில் நஜிப்பை விமர்சித்த பின்னர், அவர் 2016-இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதே நேரத்தில், மகாதீர், நஜிப் மற்றும் 1எம்டிபி ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 ஆண்டுகளாக அவர் வழிநடத்திய கட்சியான அம்னோவை விட்டு வெளியேறினார்.

மகாதீர், மொகிதின் மற்றும் சிலர், பின்னர் பெர்சாத்து கட்சியை நிறுவி நம்பிக்கைக் கூட்டணியுடன் சேர்ந்தனர். பின்னர் 2018 பொதுத் தேர்தலில் நஜிப் தலைமையிலான தேசிய முன்னணியை வீழ்த்தினர்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு பிப்ரவரியில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. மொகிதின் பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியே கொண்டு வந்து தேசிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கினார்.

அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறினார்.

ஆனால், அன்வார் இதுவரை தமக்கான ஆதரவை நிரூபிக்கவில்லை. மேலும் அவர் பெற்ற ஆதரவின் அளவை தெரிவிக்க மாமன்னரையும் சந்திக்கவில்லை.