கோலாலம்பூர் : அக்டோபர் 13 ஆம் தேதியன்று அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்ததைத் தொடர்ந்து நாட்டில் அடுத்தடுத்து புதிய அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
அன்வார்-மாமன்னர் சந்திப்பு நடந்த அதே அக்டோபர் 13-ஆம் தேதி இரவு அம்னோ கட்சியின் அரசியல் பிரிவு குழு தனது சந்திப்புக் கூட்டத்தை நடத்தியது.
அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி, துணைத் தலைவர் முகமட் ஹாசான் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்
தற்போது நாட்டை ஆண்டு வரும் பெரிக்காத்தான் நேஷனல் என்னும் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தந்து வரும் ஆதரவை மீட்டுக்கொள்வதைப் பரிசீலிக்கும் முடிவை அந்தக் கூட்டத்தில் அம்னோ எடுத்துள்ளது என கட்சியின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் கூட்டத்திற்குப் பின்னர் அறிவித்தார்
அப்படியே அந்தக் கூட்டணியில் தொடர்ந்து இணைந்து இருக்க வேண்டுமானால் புதிய நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் எழுத்து மூலமான உடன்பாடு காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை அம்னோ எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.