Home One Line P2 ஜோ பைடன் : 295 வாக்குகள் வரை பெறுவார்

ஜோ பைடன் : 295 வாக்குகள் வரை பெறுவார்

991
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஜோ பைடன். நவம்பர் 3-ஆம் தேதி வாக்களிப்பு நடந்து முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கையில் 253 தேர்தல் வாக்கு தொகுப்புகளைப் பெற்றார் பைடன்.

டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணிக்கை நிலை குத்தி நின்றது. சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருந்தாலும், இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறுகிய அளவிலேயே இருந்தது.

அமெரிக்காவும் அகில உலகமும் நகங்களைக் கடித்தபடி இரவு பகலாக முடிவுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

வெற்றி எண்ணிக்கையான 270-ஐ பைடன் கடப்பாரா எனக் காத்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக சனிக்கிழமை நவம்பர் 7-ஆம் தேதி காலையில் பென்னிசில்வேனியா மாநிலத்தின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மலேசிய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 12.30 மணி அளவில் அந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த மாநிலத்தின் 20 தேர்தல் வாக்கு தொகுப்புகளையும் பெற்றார் ஜோ பைடன்.

இதைத் தொடர்ந்து 273 வாக்குகளுடன் தெளிவானப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறார் ஜோ பைடன்.

இந்த இறுதிக் கட்ட பரபரப்பான வெற்றி சாத்தியமானது எப்படி? ஜோ பைடனின் மொத்த வாக்குகளான 538-இல் எத்தனை வாக்குகளை மேலும் அவர் பெறுவார் என்பது குறித்தும் சற்று கண்ணோட்டமிடுவோம்.

முடிவை நிர்ணயிக்கும் 4 மாநிலங்கள் 

அதிபர் தேர்தலில் 253 – 214 என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை முடங்கியிருந்த நிலையில் பென்னிசில்வேனியா, ஜோர்ஜியா, நெவாடா, அரிசோனா ஆகிய நான்கு மாநிலங்களின் முடிவுகள்தான் இறுதி வெற்றியாளரை நிர்ணயிக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.

அதன்படி பென்னிசில்வேனியா மாநில முடிவுகள் முதலில் வெளியாகியிருக்கின்றன. 20 வாக்குகளை தனக்கு சாதகமாக அள்ளியிருக்கிறார் ஜோ பைடன். அதைத் தொடர்ந்து அடுத்த அமெரிக்க அதிபராகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஜோர்ஜியா மாநிலத்திலும் பைடனும் முன்னணியில் இருக்கிறார். 16 வாக்குகளைக் கொண்டது இந்த மாநிலம். அடுத்து 6 வாக்குகளைக் கொண்ட நெவாடா மாநிலத்திலும் முன்னணியில் இருக்கிறார் பைடன்.

இந்த இரண்டு மாநிலங்களிலும் கணிசமான வாக்கு எண்ணிக்கையில் பைடன் முன்னணி வகிக்கிறார்.

எனவே, அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும்போது இந்த 2 மாநிலங்களில் இருந்து மேலும் 22 வாக்குகளை பைடன் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, மொத்தமுள்ள 538 வாக்குகளில் 295 வாக்குகளை பைடன் பெறுவார் என்பது உறுதியாகக் கணிக்கப்படுகிறது.

அரிசோனா மாநிலத்தில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார் பைடன்.

அரிசோனாவின் 11 வாக்குகள் டிரம்புக்கு சென்றாலும், பைடனுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை.

ஆக ஜோர்ஜியா, நெவாடா, ஆகிய மாநிலங்களின் வாக்குகளைச் சேர்த்து 295 வாக்குகளில் பைடனின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. இதைவிடக் கூடுதலாக வாக்குகள் கிடைக்கும் வாய்ப்புகள்தான் அதிகமே தவிர மேலும் குறைய வாய்ப்பில்லை.

அடுத்து : ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் வெற்றி உரையில் கூறியது என்ன?