வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று பரவலைத் தடுக்க புதிய அதிபர் ஜோ பைடன் ஏற்படுத்தவுள்ள அரசு நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி தலைவராக மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது அமெரிக்காவின் அருவை சிகிச்சை இயக்குனராக உயர் பதவியில் இருந்தார். டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் விவேக் மூர்த்தி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, இந்த குழுவில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவரான செலின் ராஜ் இணைய இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
செலின் ராஜ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மூத்த மகள் இவர். செலின் ராஜ், நியூயார்க் கிராஸ்மேன் மருத்துவக் கல்லுாரியில் உதவிப் பேராசிரியராகவும், அமெரிக்காவின் காசநோய் தடுப்பு பிரிவில், துணை இயக்குனராகவும் பணிபுரிகிறார்.
செலின் ராஜ் தனது தந்தை பெயரிலான அறக்கட்டளை மூலமாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது