கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் விரைவில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பார் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஜாப்ருலின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்திய சீன மற்றும் இந்திய சமூகத் தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பிறகு இந்த கருத்தினை அவர் வெளியிட்டார். தமிழ், சீனப் பள்ளிகள், மதப் பள்ளிகள் மற்றும் மிஷனரிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடுகளை வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கவில்லை.
“எதிர்காலத்தில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டை அமைச்சர் அறிவிப்பார்.
“இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக நான் தெங்கு ஜாப்ருல் மற்றும் கல்வி அமைச்சர் (முகமட் ராட்ஸி ஜிடின்) ஆகியோருடன் கலந்துரையாடினேன். விரைவில் அறிவிப்பு வரும்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு 800 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுவதாக வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அறிவித்தது.
அரசு பள்ளிகளில் வசதியான, பாதுகாப்பான ஒன்றுகூடும் இடத்தை வழங்குவதற்காக திறந்த மண்டபங்கள் அல்லது மூடப்பட்ட கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் கட்டமைத்தல் ஆகியவையும் இந்த ஏற்பாட்டில் அடங்கும்.
எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்த தமிழ், சீனப் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு இல்லை என்று பல எதிர்க்கட்சி தலைவர்களும் அரசாங்கமும் கேள்வி எழுப்புகின்றன.
“அரசாங்கத்தில் இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக நான் இந்த சிறப்பு ஒதுக்கீட்டை விரைவில் பெறுவதை உறுதி செய்வேன்.
“தமிழ், சீனப் பள்ளிகள் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட மாட்டாது என்று நான் வாக்குறுதியளிக்கிறேன், ” என்று அவர் கூறினார்.