கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெகவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டை கடந்து அவர்களுடன் இணைய முயற்சிகள் உள்ளன என்று அம்னோ கெதெரெ நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் மூசா தெரிவித்தார்.
அம்னோவின் கூட்டணிகளும் இதேபோன்று இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர், ஆனால், நிலைப்பாட்டை மெதுவாக விலக்க முயற்சிப்பவர்களும் உள்ளனர் என்று தேசிய முன்னணி பொதுச்செயலாளரான அனுவார் கூறினார்.
“அன்வார் இல்லை, ஜசெக இல்லை” கொள்கையை தவிர்க்க சதி நடந்து வருகிறது. சத்தியப்பிரமாணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான கோபம் ஏற்படுத்துகிறது. அரண்மனை மற்றும் மாமன்னரின் பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆயினும், அனுவார் சம்பந்தப்பட்ட பெயர்களைக் குறிப்பிடவில்லை, ஆனால் இதுபோன்ற சூழ்ச்சிகளைச் செய்பவர்கள் கவனிக்கப்படுவதாக அவர் கூறினார்.
“இந்த செயல் நீண்ட காலமாக தேசிய அரசியலில் உள்ளது, ஆனால் அவர்களின் இயக்கம் ஏற்கனவே அறியப்பட்டதை, அவர்கள் உணராமல் இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
அன்வார் மற்றும் ஜசெக உடனான ஒத்துழைப்புக்காக பரப்புரை செய்பவர்கள் ஜசெக பின்னணியில் இருக்காது என்று கூறி தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
பேராக் அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜசெக உள்ளிட்ட நம்பிக்கை கூட்டணியுடன் அம்னோ பேச்சுவார்த்தை நடத்திய ஒரு வாரத்திற்குள் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றாலும், நீண்டகால எதிர் அணியினர் இப்போது ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அடுத்தத் தேர்தலில் தேசிய கூட்டணியை ஒதுக்கி விட்டு தனியாக போட்டியிட அம்னோ தயங்காது என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சி தொடர்ந்து தனது அதிகாரத்தை அதிகமாக முன்நிறுத்தினால் நம்பிக்கை கூட்டணியுடன் அம்னோ இணையலாம் என்று அவர் கூறினார்.
ஆளும் கூட்டணியில் பெர்சாத்து தன்னை முன்நிறுத்தி முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தால், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தில் தன்னை ஒரு மேலாதிக்க சக்தியாக திணிக்க பெர்சாத்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அம்னோ உறுப்பினர்களிடையே வெறுப்பு நிலவுகிறது என்று நூர் ஜஸ்லான் கூறினார்.