கோலாலம்பூர்: துங்கு ரசாலி ஹாம்சாவைத் தவிர அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) நிறைவேற்றப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் கூறினார்.
மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கொவிட் -19 க்கு எதிரான போராட்டத்திற்காக, அரசாங்கத்திற்கு பணம் தேவை என்பதால் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.
“நிச்சயமாக, வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படுவதற்கு நாங்கள் வாக்களிப்போம். இது கொவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நிதியுதவியை பாதிக்கும் என்பதால் எங்களால் அதைத் தடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
“இது கட்சியைப் பொருட்படுத்தாது எங்களது சொந்த உறுதிப்பாடாகும். இது தற்போதைய பிரதமரை ஆதரிப்பதைப் பற்றியது அல்ல. கட்சியை நாம் மறந்துவிட வேண்டும். நாங்கள் வரவு செலவுத் திட்டத்தை மட்டுமே ஆதரிக்கிறோம். இது வேறு எதையும் குறிக்காது,” என்று அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இரு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்குமாறு நம்பிக்கை கூட்டணி அழைப்பு விடுத்தது. வரவு செலவுத் திட்டம் கொவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் உதவி செய்யவில்லை என்று அது நேற்றைய ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.
நவம்பர் 26 அன்று, வரவு செலவுத் திட்டம் கொள்கை கட்டத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.