கோலாலம்பூர்: கடந்த வியாழக்கிழமை வீட்டு கண்காணிப்பை மீறி மக்களவைக்கு வந்ததால், தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
பிரபாகரன் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதால், மக்களவையில் இருக்கும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது ஆபத்தானது என்று அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் கூறினார்.
இந்த விவகாரத்திற்கு தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நோ ஒமார் உட்பட பல தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இருப்பினும், மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் இந்த விவகாரத்தை முதலில் ஆராய வேண்டும் என்று கூறினார்.
கடந்த வாரம் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை பிரபாகரன் மீறியது தனக்குத் தெரியாது என்று அசார் முன்பு கூறியிருந்தார்.
தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சின் உத்தரவை மீறிய எந்தவொரு தரப்பினரையும், தண்டிக்கவோ அல்லது அபராதம் விதிக்கவோ அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“வியாழக்கிழமை, அது நடந்ததை நான் உணரவில்லை. வாக்கெடுப்புப் பட்டியலை சரிபார்த்த பிறகு, பிரபாகரன் வாக்களித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உத்தரவை மீறும் எவரையும் தண்டிக்கும் அல்லது அபராதம் விதிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. சுகாதார அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றமே முடிவு செய்யும். இந்த விஷயத்தை யாரேனும் கொண்டு வர விரும்பினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.