வாஷிங்டன் : தலைப்பைப் பார்த்ததும் யார் இந்த எலென் மஸ்க் (படம்) என சிலர் கேட்கலாம். அவர்களில் பலருக்கு டெஸ்லா என்று சொன்னால் உடனடியாகத் தெரியக் கூடும்.
உலகிலேயே மிகப் பெரிய மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமாக அமெரிக்காவில் உருவெடுத்து வருகிறது டெஸ்லா. அண்மையில் இந்தியாவில் கால்பதிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.
அடுத்து வரும் ஆண்டுகளில் பெட்ரோலியப் பயன்பாட்டைக் கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், எலென் மஸ்க் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தற்போதைக்கு உலகின் முதல் நிலைப் பணக்காரராகத் திகழ்பவர் அமேசோன் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோஸ்.
அவருக்கும் எலென் மஸ்க்குக்கும் இடையில் தற்போது இருக்கும் வித்தியாசம் வெறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான். எனவே, இந்த ஆண்டில் டெஸ்லா வணிகம் மேலும் விரிவடைந்து அதன் பங்கு விலைகளும் உயரத் தொடங்கினால், வெகு விரைவில் எலென் மஸ்க் ஜெப் பெசோசை முந்தி உலகின் முதல் நிலை பணக்காரராக உயர்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த அக்டோபர் 2017 தொடங்கி ஜெப் பெசோஸ் உலகின் முதல் நிலைப் பணக்காராகத் தனது நிலையைத் தொடர்ந்து தற்காத்து வருகிறார்.
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) எனப்படும் விண்வெளிப் பயண ஆராய்ச்சி நிறுவனத்தையும் எலென் மஸ்க் நடத்தி வருகிறார். இந்த வணிகமும் தற்போது பிரபலமாகி வருகிறது. ஜெப் பெசோசும் தனது அமேசோன் நிறுவனத்தின் வாயிலாக இதே போன்ற வணிகம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த பொறியியலாளரான எலென் மஸ்க் தற்போது 181.1 பில்லியன் டாலர் மதிப்புடையவராகக் கருதப்படுகிறார்.
கடந்த ஓராண்டில் மட்டும், 49 வயதான எலென் மஸ்க் சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்திருக்கிறது. குறுகிய காலத்தில் உலகிலேயே மிக அதிகமான சொத்து வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.