கோலாலம்பூர் : நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர காலத்தை முன்னிட்டு மாமன்னருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஒரு சுயேச்சையான சிறப்பு குழு அமைக்கப்படும் என பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அந்தக் குழுவில் இடம் பெறுவதற்கு 3 நபர்களைப் பரிந்துரைக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரசாங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசான் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பேரும் எதிர்க் கட்சிகளின் சார்பாக மாமன்னருக்கான ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவில் இடம்பெறுவர். இந்த குழுவில் சுகாதார நிபுணர்களும் இடம் பெற்றிருப்பர்.
இதற்கிடையில், ஆலோசனைக் குழுவில் இடம் பெறுவதா அப்படி இடம் பெற்றால் யாரை ஆலோசனைக் குழுவில் நியமிப்பது என்ற முடிவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அன்வார் மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் விரைவில் முடிவெடுப்பார் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளையில் இந்த ஆலோசனைக் குழுவில் எதிர்க்கட்சிகள் இடம் பெறக் கூடாது என அமானா கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரான மாஹ்பூஸ் ஓமார் கூறியிருக்கிறார். அப்படிச் செய்வதால் பெரும்பான்மையை இழந்திருக்கும் மொகிதின் யாசின் அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியதாக பொருள்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.