கோலாலம்பூர்: அவசர பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்க அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியதாக கெதெரே நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் மூசா கூறினார்.
முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இந்த விஷயத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தினார்.
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவிக்குமாறு கோரும் முன்பு சம்பந்தப்பட்ட நிபுணர்களை முதலில் அகமட் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
“பொதுச் செயலாளர் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் மத்திய அரசியலமைப்பின் பிரிவு 150 (3) இன் கீழ் கூறப்படும் நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்ட மாமன்னரை வலியுறுத்துவதற்கு உடன்பாட்டை வெளிப்படுத்த 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை வழங்கினார். சட்ட விவகாரங்களில் புத்திசாலித்தனமாக இருப்பதற்கு அரசியலமைப்பு நிபுணரை (அரசியலமைப்பு நிபுணர்) கலந்தாலோசிப்பது நல்லது,” என்று அனுவார் தெரிவித்தார்.
அனுவார் தனது மறுமொழி கடிதத்தையும் அம்னோ பொதுச் செயலாளரிடம் பதிவேற்றினார்.
அக்கடிதத்தில், இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளுடன் சதி செய்து, கட்சியின் முடிவை அவமதிப்பதற்கும், மாமன்னருக்கு கீழ்ப்படியாததற்கும் ஒரு தெளிவான முயற்சி என்று அனுவார் விவரித்திருந்தார்.