கோலாலம்பூர் : தலைநகரில் தாய்க் கோவிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் அரிய சேவைகளைச் செய்தவரும் பசு மார்க் சுருட்டு நிறுவன உரிமையாளருமான வி.எல்.கோடிவேல், நேற்று வியாழக்கிழமை ஜனவரி 28-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
அன்னாரின் மறைவுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவருமான பெ.இராஜேந்திரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
“வணிகத்தில் சிறந்து விளங்கிய காலகட்டத்தில் அன்றைய காலகட்டத்தில் வள்ளல்கள் என்கிற முத்திரையோடு நம் இனத்தில் திகழ்ந்தவர்களில் வி.எல்.கோடிவேல் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர் இல்லாமல் அவருடைய உதவி இல்லாமல் கோலாலம்பூர் வட்டாரத்தில் பல கலை, இலக்கிய, சமய நிகழ்ச்சிகளும் நடந்திருக்க முடியாது. நூல் வெளியீடுகளும் நடந்திருக்காது. எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டிருப்பார் அல்லது தனது பங்களிப்பாக நன்கொடைகளை வழங்கி இருப்பார்” என கோடிவேலுக்கு இராஜேந்திரன் புகழாரம் சூட்டினார்.
பல தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை அவர்களின் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் நூலாக வாங்கி பெரும் ஆதரவு தந்தவர் அவர் எனவும் இராஜேந்திரன் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
“கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவராக இருந்தார். ம.இ.கா.விலும் ஈடுபாடு கொண்டிருந்தார், வெற்றிகரமான வர்த்தகராகவும் திகழ்ந்தார் என்பதை எல்லாம் கடந்து சமூக அக்கறையுள்ள ஒரு சேவையாளர் என்பது அவருக்குரிய சிறப்பாக இன்றுவரை நிலைக்கிறது. செந்தூல் வட்டாரம்தான் அவருடைய பொது வாழ்க்கையின் மையமாக இருந்தது. அதனால்தான் அவர் செந்தூல் ம.இ.கா. கிளையில் உறுப்பியம் பெற்றிருந்தார்” என்றும் இராஜேந்திரன் தெரிவித்தார்.
சிலாங்கூர் தைப்பூச விடுமுறை
“ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவராக அவர் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான், சிலாங்கூர் மாநிலத்தில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை கிடைத்தது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் வி எல் கோடி வேல் என்பது குறிப்பிடத்தக்கது” என்றும் நினைவு கூர்ந்தார்.
“அன்றைய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ வி.எல். காந்தனின் உதவியோடு, வி.எல் கோடிவேலுவும் தேவஸ்தானத்தின் அன்றைய செயலாளர் டான்ஸ்ரீ நடராஜாவும் அன்றைய மாநில மந்திரி புசார் டத்தோ ஹொர்மாட் ரபி அவர்களை சந்தித்து பேச்சு நடத்தினர். தொடர்ந்து கோடிவேல் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சிலாங்கூர் மாநிலத்தில் தைப்பூச விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது வரலாறு” என்ற விவரத்தையும் இராஜேந்திரன் தனது இரங்கல் செய்தியில் பகிர்ந்து கொண்டார்.
“மலேசிய சிலம்பக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது, டத்தோ காந்தன் தலைவராகவும், தொடக்கத்தில் (ஈப்போ) வழக்கறிஞர் ம.மதியழகன் துணைத் தலைவராகவும் பின்னர் கோடி வேல் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர். சிலம்பக் கழகத்தை நாடு முழுவதும் கிளைகளாகத் தோற்றுவித்ததிலும், சிலம்பக் கலையை வளர்ப்பதற்கும் கோடிவேல் ஆற்றிய பங்கு அளப்பரியது” என்றும் இராஜேந்திரன் நினைவு கூர்ந்தார்.