(கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் மறைவு குறித்து மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது கண்ணீர் வரிகளால் படைத்த இரங்கல் கவிதை இன்று (பிப்ரவரி 21) மக்கள் ஓசை நாளிதழில் இடம் பெற்றது. அந்தக் கவிதையை செல்லியல் வாசகர்களுக்காக வழங்குகிறோம்)
ப. ராமு எனும் மந்திரக் கவிஞனே
எனக்கு கட்டை விரல் தராமல்
கவிதை விரல் தந்த ஏகலைவனே
உன் மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சி தரவில்லை;
ஆனாலும் அழுகையை நிறுத்த முடியவில்லை!
இந்த நாடும் மக்களும் நாளைகளை எண்ணி
நடைபோடும் இந்த நேரத்தில்
உன்னுடைய நேற்றுகளை நோக்கி
என்னை அசைபோட வைத்தவனே..!
10 ஆண்டுகளுக்கு முன் நீ யாரோ… நான் யாரோ?
ஆனால், கடந்து சென்ற 10 ஆண்டுகளில்
என்னைப் புதுக்கவிதை சிறையில் அடைத்தவனே..!
என் தாய் எனக்குப் பாடிய தாலாட்டைவிட
அதிகம் வாழ்த்திப் பாடியவன் நீ
சீனி நைனா முகமதுவிற்குப் பின்
என்னை ஆத்மார்த்தமாக கவிதை வழி நேசித்தவனே..!
என்னுடைய புத்தகத்தை வெளியீடு செய்து கொடுங்கள்
என்று கேட்டவர்கள் மத்தியில்
என்னையே புத்தகமாக வெளியிட்டவன் நீ..!
தமிழை முகவரியாக வைத்து
சாமிவேலுவுக்குப் பின்னால் அணிவகுத்த என்னை
தமிழின் முகவரியாக அறிவித்தவன் நீ..!
தாராளமாக அள்ளிக்கொடுங்கள் என்று
உரிமையோடு என்னைக் கேட்டவர்கள் மத்தியில்
உரிமை இருந்தும் கேட்கத் தெரியாதவன் நீ..!
ஒவ்வொரு முறையும் மஇகா கட்டடத்தில்
நீ நிற்கும்போது – வாழ்ந்து கெட்ட ஒருவன்
தானம் கேட்க வந்தால் எப்படி தயங்கித் தயங்கி நிற்பானோ
அந்த நிலையில் நீயும்;
உனது தேவை என்னவென்று படைத்த எனக்குத்
தெரியும் என்ற நிலையில் நானும்
செயல்பட்டது நமக்கு மட்டுமே தெரியும்..!
பலமுறை என்னிடம் பேச ஆசைப்பட்டவன் நீ
உன் இறுதி நாட்களில் உன்னிடம்
சில முறையாவது பேச ஆசைப்பட்டவன் நான்..!
கொரோனா தொற்றால் மருத்துவமனையில்
மந்திரிகளுக்குக்கூட தடை உத்தரவு
அதையும் மீறி பதவி அதிகாரத்தில்
உள்ளே வந்து விட்டால்
வாட்ஸ்அப்பில் பல வசை உத்தரவுகள்..!
இறுதியில் நாம் இருவருமே பேசாப்
பொருளானோம்..!
போஜனத்திற்காக என்னைப் போலியாய்
புகழ்ந்த சிலருக்கு மத்தியில்
ஆழ்மனத்தின் அடியில் இருந்து
என்னை அன்பொழுகப் பாடிய கவிஞனே..!
எல்லாத் தேர்தல்களிலும் ஜெயிக்க
ஆசைப்பட்டவன் நான்
ஆனால், எல்லாத் தேர்தல்களிலும்
நான் மட்டுமே ஜெயிக்க வேண்டும்
என்று கவிதை பாடியவன் நீ..!
இறையருள் கவிஞர் சீனி நைனா முகமதுவுக்குப் பின்
மரணத்தைப் பரிசாகத் தந்து
என்னைக் கலங்க வைத்த கவிஞன் நீ..!
உன்னுடைய 11ஆவது கவிதைப் புத்தகத்தை
நான் வெளியீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாய்..!
வெளியீடு செய்வதற்கு நான் தயார்
ஆனால், உடன் இருக்க நீ இல்லையே, ராமு..!
என் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை
மறக்க முடியாத சில நல்லவர்களுள்
நிச்சயம் நீ இருப்பாய்..!