கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடியிடம் ஊழல் வழக்குக்கு இடையூறு ஏற்படாதவாறு, எந்தக் கூட்டத்திலும் இனி ஒரு வார காலத்திற்கு கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு சாஹிட் ஹமிடியின் வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவெரா உத்தரவிட்டுள்ளார்.
சாஹிட்டின் விசாரணை மார்ச் 4- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர் கலந்து கொண்டதை அடுத்து, அம்னோ தலைவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
“அவரது வழக்கை அரசு தரப்பு முடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த தடங்கலும் இல்லாவிட்டால் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று நீதிபதி கூறினார்.
முன்னதாக, வழக்கறிஞர் ஹமிடி முகமட் நோ சமீபத்திய ஒத்திவைப்புக்கு விண்ணப்பித்தார். அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் ஜோஹன் அப்துல் அஜீஸுடன் சாஹிட் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று அவர் கூறினார்.
பகாங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் சாஹிட் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.