சென்னை: இன்று புதன்கிழமை (மார்ச் 17) தேமுதிக அலுவலகத்திற்கு அமமுக டிடிவி தினகரன் வருகைப் புரிந்தார்.
அமமுக, தேமுதிக கூட்டணியில் இணைந்ததால் தங்களின் 42 வேட்பாளர்கள் உடனடியாக விட்டுக்கொடுத்ததாக தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
“கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒரே கொள்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விருத்தாச்சலம் தொகுதியை திருமதி கேப்டனுக்காக (பிரேமலதா) கேட்டார்கள். எங்கள் வேட்பாளர் விட்டுக்கொடுத்தார். எங்கள் ஒரே இலக்கு வெற்றி தான். அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்,” என்று தினகரன் பேசியுள்ளார்.
தேமுதிக அதிமுகவிலிருந்து விலகியதை அடுத்து, அமமுகவுடன் இணைவதாகக் கூறியது.
முதல்வர் வேட்பாளர் குறித்து முரண்பட்ட கருத்துகள் இக்கட்சிகளுக்குள் நிலவியதாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “நாங்கள் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் தான்,”என்று அறிவித்தார்.