கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான சரியான தேதி எப்போது என்பதை, அம்னோ உச்சமன்றம் நிர்ணயிக்க வேண்டுமென அம்னோ பொதுப் பேரவையில் முடிவு செய்யப்பட்டது.
நேற்று முடிவடைந்த இரண்டு நாட்கள் நீடித்த அம்னோ பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, கட்சி எந்த நேரத்திலும் பின்வாங்கலாம் என்று கூறினார்.
இது பின்னர் முடிவு செய்யப்படும்போது, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அல்லது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் (ஜி.எல்.சி) தலைவர்கள் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக பதவி விலகுவார்கள் என்று அவர் கூறினார்.
” பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்றால், எந்நேரத்திலும் அரசாங்கத்திலிருந்து விலக அம்னோவுக்கு பேராளர்கள், தலைவருக்கு ஆணை வழங்கியுள்ளனர். இது நடந்தால், அமைச்சர்கள், பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான முடிவை 100 விழுக்காடு பின்பற்றுவார்கள்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான், அவசரகால அமலாக்கம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் ஆகஸ்டு மாதத்தில் அவர்கள் விலகுவதாக சூசகமாக தெரிவித்திருந்தார்.