கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறி மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்த கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் மீது 10 மில்லியன் ரிங்கிட் கோரி பிகேஆர் கட்சி வழக்கு தொடுக்கிறது.
பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழுத் தலைவர் பாஹ்மி பாட்சில் இந்தத் தகவலை வெளியிட்டார். இதற்கான வழக்கறிஞர் கடிதம் சேவியருக்கு அனுப்பப்படும் என்றும் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள், கட்சி மூலமாகத் தாங்கள் வகிக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் மீது 10 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுக்கும் நடைமுறையைப் பிகேஆர் கட்சி பின்பற்றுகிறது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளைப் போட்டியிட ஒதுக்கும்போது இதற்கான ஒப்பந்தம் ஒன்றில் வேட்பாளர்கள் கையெழுத்திட வேண்டும்.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி பிகேஆர் உதவித் தலைவருமான சேவியர் ஜெயகுமார் பிகேஆர் கட்சியிலிருந்து விலகுவதாகவும் பிரதமர் மொகிதின் யாசின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தார்.