கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியுடன் தொலைபேசி அழைப்பில் இருந்ததை மறுத்துள்ளார். மேலும், இது பொய்களை பரப்பும் அரசாங்கத்தின் பணி என்றும் அவர் கூறினார்.
அம்னோ தலைவர்களிடையே மோதல்களைத் தூண்டுவதற்கான முயற்சியில் இந்த குரல் பதிவு வெளியிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
“நான் மறுக்கிறேன். ஆனால், நாட்டின் தலைமை கவலை கொண்டுள்ளது என்பதும், எந்த தந்திரங்களையும், அச்சுறுத்தல்களையும், இலஞ்சங்களையும் பயன்படுத்தும் என்பதும் தெளிவாகிறது. அவை தோல்வியுற்றதால், அரசு பொய்களைப் பரப்புகிறது,” என்று அவர் சிலாங்கூரில் நடந்த பிகேஆர் நிகழ்ச்சியில் கூறினார்.
நேற்றிரவு முதல், நான்கு நிமிட காணொலி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
முன்னதாக சாஹிட் ஹமிடியும் இந்த குரல் பதிவின் நம்பகத்தன்மையை மறுத்தார். மேலும் தனது அதிகாரியை காவல் துறையில் புகார் அளிக்குமாறும் உத்தரவிட்டதாகக் கூறினார்.
“இது (குரல் பதிவு) அம்னோவை எதிர்த்துப் போராடுவதற்கு எங்களைப் பயன்படுத்துவதும், எனக்கும் சாஹிட்டுக்கும் இடையிலான உரையாடலை பெர்சாத்து பயன்படுத்துகிறது. குரல் என்னுடையது போல் தெரிகிறது. அவதூறு பேசும் முயற்சி உள்ளது,” என்று அவர் கூறினார்.
இது போன்ற அவதூறுகள் பிகேஆர், ஜசெக மற்றும் அமானா இடையிலான உறவை பாதிக்காது என்று அன்வார் கூறினார்.