Home உலகம் சிங்கப்பூரின் புதிய நிதியமைச்சர் நியமனம்! அடுத்த பிரதமர் யார்?

சிங்கப்பூரின் புதிய நிதியமைச்சர் நியமனம்! அடுத்த பிரதமர் யார்?

668
0
SHARE
Ad
சிங்கையின் புதிய நிதியமைச்சர் – லாரன்ஸ் வோங்

சிங்கப்பூர் : முன்னாள் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் தனது பதவி விலகலை அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் மிகப் பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு பிரதமர் லீ சியன் லூங் ஆட்சிகாலத்திற்குப் பின்னர் அடுத்த பிரதமராக வரக் கூடியவர் எனக் கருதப்பட்டவர் ஹெங் சுவீ கியாட். எனவே அவரின் திடீர் பதவி விலகல் சிங்கை அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

ஹெங் சுவீ கியாட்

இவர் விலகிக் கொண்டுள்ள நிலையில் யார் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவர் என்ற ஆரூடங்கள் சிங்கை எங்கும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் புதிய நிதியமைச்சராக லாரன்ஸ் வோங் என்பவர் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சிங்கப்பூரின் கல்வி அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

பொதுவாக நிதியமைச்சர் பதவி பிரதமருக்கு அடுத்த அதிகார மையங்களைக் கொண்டுள்ள பதவியாகக் கருதப்படுவதால் லாரன்ஸ் வோங் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க தயார்ப்படுத்தப்படுகிறார் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

இவரைத் தவிர புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஓங் யீ குங், புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சான் சூன் சிங் ஆகியோரும் அடுத்த பிரதமர் பதவிக்கு வரக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

ஓங் யீ குங் இதற்கு முன்பு போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார். நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சான் சூன் சிங் முந்தைய அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக இருந்தார். தற்போது கல்வி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

69 வயதான நடப்பு பிரதமர் லீ சியன் லூங் (படம்) அண்மைய சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவோடு செயலாற்றி வருகிறார். அதைத் தொடர்ந்து சிங்கையின் அடுத்த பிரதமராக யார் வருவார் என்ற விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த சூழலில் நேற்றைய அமைச்சரவை மாற்றங்கள் மூலம், அடுத்த பிரதமராக வரக் கூடிய சில தலைவர்களை லீ சியன் லூங் கோடி காட்டியுள்ளார் எனக் கருதப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.