வாஷிங்டன் : அண்மைய மாதங்களில் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்சைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைப் பிடித்தவர் ஜெப் பெசோஸ் (படம்).
இருந்தாலும் ஜெப் பெசோசைப் பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் எலென் மாஸ்க். டெஸ்லா எனப்படும் மின்சாரக் கார் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்.
உலகம் எங்கும் அதிகரித்த மின்சாரக் கார் பயன்பாட்டினால் டெஸ்லாவின் பங்கு விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன. அந்தப் பங்குவிலைகளின் அடிப்படையில் உலகப் பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடித்தார் எலென் மாஸ்க்.
ஆனால், மே 17-ஆம் தேதி புளும்பெர்க் வணிக நிறுவனம் வெளியிட்டிருக்கும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்திற்கு சரிந்தார் எலென் மாஸ்க். தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவரான எலென் மாஸ்க் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டிருக்கும் டெஸ்லாவின் பங்கு விலைகள் குறைந்ததுதான் அதற்குக் காரணம்.
எலென் மாஸ்க்கின் சொத்து மதிப்பு 24 விழுக்காடு சரிந்து தற்போது 160.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அமேசோனின் பெரும்பான்மை பங்குதாரரான ஜெப் பெசோசின் சொத்து மதிப்போ உயர்ந்து 190 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அவரை உலகப் பணக்காரராக முதலிடத்தில் அறிவித்திருக்கிறது புளும்பெர்க்.